இலங்கைசெய்திகள்

காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல – சட்டத்தரணி ரட்ணவேல்!!

Attorney Ratnavel

காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், ஒரு சில சலுகைகளைக் கொடுத்து சமரசம் செய்யக்கூடியதொன்றல்ல என்பதனை அரசாங்கத்தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் போரில் காணாமல் ஆக்கப்பட்டோர், இலங்கை அரசாங்கத்திடம் சரணடைந்தோர் விடயம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இவை யாவற்றிலும் அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டிய நிலையிலிருக்கின்றது.

காணாமலாக்கப்பட்டோர் விடயம்

ஏனென்றால் அவர்கள் சரணடைந்தது மற்றும் காணாமலாக்கப்பட்டது எல்லாமே அரசாங்கத்தின் பிரிவினராகிய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் என பல்துறை சம்பந்தப்பட்டவர்கள். எனவே இதற்கு முற்றுமுழுதாக அரசாங்கம் தான் பதில் கூற வேண்டும் ஆனால் அந்த பொறுப்பிலிருந்து அரசாங்கம் தட்டிக்கழித்து கொண்டிருக்கின்றது.

மேலும் அந்த குற்றங்களை புரிந்தவர்கள் அந்த நேரத்திலும் சரி, இப்போதும் சரி அரசாங்கத்தின் பெரும் பொறுப்புக்களிலிருப்பவர்கள் அல்லது பொறுப்புக்களிலிருப்பவர்களுக்கு மிக நெருங்கிய சம்பந்தப்பட்டவர்கள்.

எனவே இவர்களை காட்டிக்கொடுக்காமல் இருப்பதற்கும், இவர்களை பாதுகாப்பதற்கும் தான் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய எந்தவிதமான ஒரு நடவடிக்கைகளையும் எடுக்காமலிருக்கின்றது. அதே சமயத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிலையத்தையும் அதாவது OMP அலுவலகத்தையும் அவர்கள் தகுதிவாய்ந்த அதிகாரிகளை நியமிக்காமல் தங்களுடைய அடிவருடிகளை நியமித்து அந்த அலுவலகத்தை சரியான முறையில் இயங்காமல் இருப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

காணாமலாக்கப்பட்டோர் விடயம்

இந்த காணாமல் ஆக்கப்பட்டவருக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அதன் ஆணையாளர்களாக தொடக்கத்தில் பணியாற்றியவர்கள் மக்களிடம் அந்த விடயத்தை கொண்டுசென்று ஓரளவேனும் தங்களது கடமைகளை உணர்ந்ததாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தற்போது பதவிக்கான காலம் முடிந்த பின்னர் இந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணையாளர்கள் முற்றுமுழுதாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருப்பவர்கள். அதன் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அவர். அரசாங்கத்தின் ஒரு சார்பாளராக பதவிக்காலத்தில் பதவியிலிருந்தபோது கருதப்பட்டவர். எனவே அவரின் நடவடிக்கை எப்படியிருக்குமென நாங்கள் கூறத்தேவையில்லை .

எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் அசமந்தமாக இருப்பது மட்டுமல்ல அந்த விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தையே காணாமலாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கின்றன. இதை தற்போதைய அரசாங்கம் சரி, முன்னைய அரசாங்கமும் சரி எந்த நடவடிக்கை களையும் எடுக்கவில்லை. எனவே எந்த அரசாங்கம் வந்தபோதிலும் இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் பொலிஸாரையும் இராணுவத்தினரையும் காப்பாற்றுவதற்காகவே இவர்கள் செயற்படுகின்றார்கள்.

ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்து (2015) குறுகிய காலத்தில் பயங்கரவாத நடவடிக்கையை நாங்கள் ஒழிக்கப்போவதில்லை, பதவிவிலக்கப் போவதில்லை அவர்கள் தங்களுடைய பணிகளை செய்துகொண்டிருக்க வேண்டும் அதே சமயம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என மனிதாபிமானமற்ற முறையில் கூறியிருந்தார். அதைத்தான் தற்போது பதவியிலுள்ளவர்களும் பின்பற்று கின்றார்கள்.

எனவேதான் சர்வதேசத்தின் உதவியை நாடவேண்டிய கட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருக்கிறார்கள்.

அத்துடன் எதற்காக காணாமல் போனார்கள்?, எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? அவர்களுடைய கதி என்ன? என்ற உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். அதன்பின்னர் தான் வேறு ஏதாவது கோரிக்கைகள் என அந்த உறவினர்கள் கூறுகின்றனர்.

ஆனால் எங்களுக்கு அவர்கள் காணாமலாக்கப்பட்டமுறை, அதற்கு யார் பொறுப்பாளர்கள், பொறுப்புகூறல் விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மிகமிக ஆக்ரோஷமாக கடுமையாக இருக்கிறார்கள். எனவே இந்த விடயத்தை பூசிமெழுகுவதென்பது அரசாங்கத்தினால் இயலாத காரியம். எனவே இந்த போராட்டம் தொடரும். அந்த நடவடிக்கைகள் அரசாங்கம் நினைப்பதுபோல் அல்லது அரசாங்கத்தை சார்ந்தவர்கள் நினைப்பதுபோல் ஒரு சில விடயங்களை கொடுத்து சமரசம் செய்யக்கூடிய ஒரு விடயமல்ல என்பதனை அரசாங்கத்தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button