போதைப்பொருள் கடத்தல், ஹெரோயினுடன் கைது, வீடுடைத்து திருட்டு , வீதியில் சங்கிலி அறுப்பு , இளம்பெண் தற்கொலை இப்படியான செய்திகளையே அன்றாடம் எம்மால் பார்க்கமுடிகிறது. ஏன் இவ்வாறான ஒரு சூழல் திடீரென உருவானது? சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியான செய்திகள் மிகமிக அரிதாகத்தானே இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை மாற்றத்திற்கு என்ன காரணம்….
எப்போதாவது நாம் சிந்தித்தது உண்டா…..
சிந்தித்துப் பார்த்தால் நிச்சயமாக ஒரு உண்மை புலப்படும்…எமது வாழ்வியல் முறை மாறியிருக்கிறது. அத்தியாவசியங்களை விழுங்கியிருக்கின்றன ஆடம்பரங்கள். …அரசுகளின் ஆரோக்கியமற்ற செயற்பாடுகள் வறுமையை ஏற்படுத்தியிருக்கின்றன.
மேலைநாட்டு கலாசாரத்தின் திடீர் வருகை என்பது உணவு, உடை , உறையுள் என அத்தனையிலும் புதுமையைப் புகுத்திவிட இல்லாமை என்பது வெகு இயல்பாக எம் மத்தியில் வந்து அமர்ந்துவிட்டது.
உயர்ந்துவிட்ட பொருட்களின் விலைவாசி அன்றாடம் காய்ச்சிகளுக்கு அவலத்தைக் கொடுத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களும் சமூக குற்றங்களும் பெருகியிருக்கின்றன. பசியும் பட்டினியும் மனதில் ஈரக்கசிவை அல்ல, இரத்தக்கசிவையே உண்டுபண்ணும். அன்றாட வாழ்வை நகர்த்த வேண்டிய தேவையின் பொருட்டு ஏதோ ஒரு வழியில் பொருளீட்டியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் பல ஆண்களுக்கும் குடும்பச்சுமை தாங்கும் பெண்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
வேலையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. விலைவாசி உயர்ந்திருக்கிறதே தவிர கொடுப்பனவு உயரவில்லை. செய்த வேலைக்கு கூலி கொடுப்பதற்கே சில வேலைத்தளங்கள் பின்னிற்கின்றன. இந்த நிலையில் கல்வி கற்ற, இடையில் கல்வியை நிறுத்திக்கொண்ட பல இளைஞர் யுவதிகள் வேலையின்மை என்ற பிரச்சினையில் சிக்கித்தவிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிகோலுகின்றது. காலையில் பணிக்குச்சென்று மாலையில் வீடு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக தேவையற்ற பிரச்சினைகளைக்குறைத்துவிடலாம். அதுமட்டுமல்லாது அந்த வேலைத்தளங்கள் மூலம் அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டலும் கிடைத்துவிட்டால் சாதிப்பது ஒன்றும் அவர்களுக்கு மகா காரியம் அல்ல. இவ்விடயத்தை அரசும் அரசியல்வாதிகளும் சிந்திக்கவேண்டும். நாட்டையும் குடிகளையும் தமது சொந்த வீட்டையும் பிள்ளைகளையும் போல எண்ணினால் நிச்சயமாக குற்றங்கள் குறைந்துவிடும்.
இத்தகைய நிலையில் இன்னொரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். குடும்ப முன்னேற்றமே சமூகத்தை முன்னேற்றுகிறது. சமூக முன்னேற்றமே கிராமத்தை முன்னேற்றுகிறது. கிராம முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களிப்புச் செய்கிறது. கிராமங்கள் வளர்ச்சியடைந்தாலே நாடு வளர்ச்சியடையும் என்பது தெரிந்த விடயம்தானே. பொருளாதார கஸ்டம் என்பது ஏனைய எதையுமே முன்னெடுப்பதற்கு அனுமதிக்காது. சோறில்லை என்ற நிலைமையில் ஒரு மனிதனால் வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவே முடியாது. ஆகையால் கிராமங்கள் தோறும் தொழிற்கூடங்களை அமைத்து இறுக்கமான நிர்வாக கட்டமைப்பை முன்னெடுத்தால் இந்த வறுமையையும் அதனால் உருவாகியுள்ள பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கமுடியும். வீட்டு வருவாயைப் பெருக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் இன்னும் ஆழமாகக் கொண்டு சேர்க்க வேண்டும். உற்பத்திக்கூடங்களை உருவாக்குவதன் மூலம் தொழில் வாய்ப்புகளையும் பெருக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் குடும்பங்களில் காணப்படும் கருத்து முரண்பாடுகள், நேசமற்ற நெருக்கங்கள், தணலென கொதிக்கும் தாம்பத்தியங்கள் என அனைத்தும் சுகச்சுவடுகளைச் சுத்தமாக அழித்து மனஅழுத்தத்தை உண்டுபண்ணிவிடுவதால் குடும்ப அமைப்பே ஆரோக்கியமற்றதாக மாறிவிட , கண்ணுக்குப் புலப்படாத ஒரு கசடு, அந்தக் குடும்பத்தவர்கள் அனைவரும் நெருக்கடியான சூழலுக்குள் வாழவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. பெரியவர்கள் தமது இல்லாமையையும் இயலாமையையும் சிறுவர்கள் மீதே காட்ட முற்படுகின்றனர். ஒரு மனிதனின் விகாரப்பட்ட சிந்தனையானது நிச்சயமாக சாதாரண வாழ்வு முறையைவிட மாறுபட்ட எண்ணத்தையே உருவாக்கும். இத்தகைய பிரச்சினைகள் தற்போது எம்மத்தியில் மிக அதிகமாக உள்ளதென்பதற்கு நீதிமன்றத்தை நிறைக்கும் விவாகரத்து வழக்குகளும் பத்திரிகையை அலங்கரிக்கும் குற்றச்செயல்களுமே காரணமாகும்.
இத்தகையதோர் நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் காக்கவேண்டிய கடமை நாட்டின் தலைவரது கைகளிலேயே தங்கியுள்ளது. Burn Zchoes Selznick என்னும் உளவியலாளர், ‘ பின்பற்றுவோரைச் செயற்படத் தூண்டும் செயற்பாடு தலைமைத்துவமாகும்’ என்கிறார்.
கோபிகை.