ஆணும் பெண்ணும் என்பதில் நிறைகிறது உலகம்!!
பெண் என்பவள் அடக்குமுறைக்கு உட்பட்ட சமூக வழிவந்த ஒரு படைப்பு என்பது பெரும்பாலும் சொல்லப்படுகின்ற கருத்து.
ஆனால் உலகத்தின் மேனியெங்கும் சிதறிக்கிடக்கிற இசையைப்போலவும் கோபுரக்கலசங்களில் மின்னிக்கொண்டிருக்கிற வைரக்கல்லைப் போலவும் பெண்ணின் படைப்பு மிக ஆழமானதும் அற்புதமானதுமாகும்.
சீதையின் அசோகவனவாசமே இராமாயணம் என்கிற காவியம்.
பாஞ்சாலியின் துகிலுரிப்பே மகாபாரதம் என்கிற காவியம்.
. எரிக்கப்பட்ட தமிழ் பெண்ணின் முகம் தான் விடுதலை கோரிய தமிழர் வரலாற்றின் ஆரம்பம்.
இப்படி வரலாறுகளும் இதிகாசங்களும் பெண்ணுக்கு தரும் வகிபாகங்கள் காத்திரமானவை.
சீதையைக் கடத்திச்சென்ற போதும்களங்கப்படுத்தாத இராவணன் என்கிற ஆணின் புனிதம் போற்றுதலுக்குரியது
அரசர்களின் வீரம் உலகிற்கு சொல்லப்பட்ட அளவிற்கு அந்தப்புர ராணிகளின் மனக்கிடக்கைகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பது பொதுவாகச் சொல்லப்படுகின்ற ஒன்று தான்.
இருப்பினும், இங்கு ஒரே ஒரு விடயம் தான் முற்றுமுழுதானதாக உள்ளது.
ஆணா? பெண்ணா? என்கிற எண்ணத்தை உதறிவிட்டு பார்த்தோமானால் ஆணும் பெண்ணும் என்கிற நிஜம் புரிந்து விடும்.
ஒரு பெண்ணின் ஆழ்மனம் என்பது எப்போதும் ஒரு ஆணின் அன்புக்கும் அக்கறைக்கும் பாதுகாப்பிற்கும் ஏங்கியபடியே இருக்கும்.
அண்மையில், பேருந்து பயணம் ஒன்றில் நான் பார்த்த விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அதிகாலைப் பயணம் அது. நான் நின்றபடி பயணித்தேன். எனக்கு அருகில் இருந்த இருக்கையில் கணவன் – மனைவி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு40- 45 வயதிற்குள் இருக்கும்.
ஜன்னலோரம் அமர்ந்திருந்த மனைவி இருக்கையில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். கணவன் அப்பப்ப கண் உறங்கினாலும் அடிக்கடி விழித்து மனைவியைப் பார்ப்பதும் அவரது கையிலிருந்த பையை தான் எடுத்து வைத்திருப்பதும், மனைவி உறக்கத்தில் மெல்ல குளிரை உணர்ந்ததும் கண்ணாடியைச் சரிப்படுத்துவதுமாக இருந்தார்.
சற்று நேரத்தில் வயதான முதிய தாய் ஒருவர் வரவும் மனைவியின் உறக்கம் கலையாத வண்ணம் தான் மெல்ல எழுந்து அந்த அம்மாவிற்கு இடம் கொடுத்த அந்த கணத்தில் விழித்துக் கொண்ட மனைவி, சிறு புன்னகையோடு அவரிடம் இருந்து பையை வாங்கிக்கொண்டார்.
கணவனின் இதமான பாதுகாப்பில் தான் அந்த மனைவி அதுவரை கண்ணுறங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல, கணவன் கனிவும் அக்கறையும் கொண்டவராக தன்னிடம் மட்டுமல்ல , மற்றவர்களிடமும் இருக்க வேண்டும் என்பது பெண்களின் விருப்பமாக உள்ளது.
மொத்தத்தில் புனிதனாக இல்லாவிட்டாலலும் கணவர்மார் அல்லது தாம் சார்ந்த ஆண் உறவுகள் மனிதராகவேனும் இருப்பதில் தான் பெண்களின் சந்தோசம் அடங்கியிருக்கிறது.
இது ஒன்றல்ல, இப்படி எத்தனையோ ஆண்பெண் சார்ந்த சம்பவங்களை நான் பேருந்துகளில் பார்க்கிறேன்.
கைக்குழந்தையை கூட தான் வாங்கிக்கொண்டு மனைவியை தன் தோள்மீதே உறஙங்கவைக்கும் கணவர்மார், தன் அருகில் நிற்கும் பெண்ணை உரசாமல் நாசூக்காக கடந்து செல்லும் இளைஞர்கள், பேருந்து தரிப்பிடத்தில் நேரம் கடந்த பின்னர் தனியே நிற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்து விட்டு வீடு செல்லும் ஆண்கள், நித்திரை கலக்கத்தில் தன் தேள் மீது சாயும் யாரோ ஒரு பெண்ணை, காமம் கலக்காத தூய நேசத்துடன் ஓரப்பார்வை பார்த்து புன்னகைத்துவிட்டு அவள் அப்படியே உறங்க அனுமதிக்கும் ஆண்கள்,
இப்படி நாம் அன்றாடம் கண்டு கடக்கும் ஆண்தேவதைகளுக்குள் தான், காமப்பசி கொண்ட, வார்த்தைகளால் வக்கிரங்களைக் கொட்டுகிற , பெண்ணின் உணர்வுகளோடு அவளையும் சேர்த்து தன் காலடிக்குள் மிதிக்கிற, அவளுடைய சிறகுகளை அறுத்து அதன் இரத்தத் துளிகள் சொல்லும் அவலக்கதைகளை வேடிக்கை பார்க்கிற ஆண்களும் உண்டு.
சாதாரணமாக ஒரு பெண்ணின் உலகம் என்பது மிகச்சிறியது தான். சின்னச்சின்ன சந்தோசங்களில் நிறைவது பெண்களின் இயல்பு.
ஒரு பெண்ணுக்கு ஒரு மடங்கு சந்தோசத்தை ஒருவர் கொடுத்தால், பத்து மடங்கு சந்தோசத்தை அவள் திருப்பி கொடுக்க நினைப்பாள். இது கபடமற்ற அன்பில் மட்டும் சாத்தியமானது.
பெண்களில் விதிவிலக்குகளும் உண்டு. அவர்கள் என் கட்டுரையின் கதாபாத்திரங்கள் அல்ல.
பெண்கள் உலகம் ஆண்களால் நிறைகிறது. விதவையின் மனதிற்குள்ளும் ஆசைகள் இருக்கும். கைவிடப்பட்டவளுக்கும் மன ஏக்கம் பொதுவானது தான்.
அடக்குமுறை என்பது வேறு, அவளாகவே வாழ அனுமதிப்பதென்பது வேறு,
அனுசரிக்கும் குணம் இருந்தால் அனைத்தும் சாத்தியமே.
எமது மூத்தோர் சொல்வார்கள், “புரிந்து கொண்ட புருசன் கிடைத்தால் பெண்கள் மலையையே புரட்டிவிடுவார்கள்” என்று.
உண்மைதான்…. அற உணர்வும் அன்பு மனமும் சமுதாய அக்கறையும் கொண்ட பெண்ணுக்கு ஆண்கள் யாதுமானவர்களே.
தங்கிவாழ்வதென்பது அடிமைத்தனம் அல்ல, அது பாதுகாப்பு சார்ந்த எதிர்பார்ப்பு.
பெண்ணின்றி ஆணில்லை என்பது போல ஆணின்றியும் பெண்ணில்லை.
நீயும் நானுமென்பதில் ஒரு காதல் எவ்வாறு உயிர்ப்பும் வெற்றியும் கொள்கிறதோ, அதுபோலவே ஆணும் பெண்ணும் என்கிற பதம் சமூக வெற்றிக்கு ஏதுவாகிறது.
உதவித்திட்டம் ஒன்றிற்காக சென்று விட்டு வந்து, கடைசி பேருந்தை தவறவிட்டு தவித்தபடி நாங்கள் நின்ற நேரத்தில் தன் சிரமம் பாராது எம்மை வீடு வரை கூட்டி வந்து சேர்த்த முகவரி தெரியாத அந்தச் சகோதரனுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.
பெண் உறவுகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.