செய்தியாளர் – சக்தி
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய நால்வர் திங்கட்கிழமை (18) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
மண்முனை மேற்கு பிரதேசத்தின் இருட்டுச்சோலைமடு பகுதியில் அமைந்துள்ள விவசாய பண்ணை காணியொன்றில் சுமார் 20 அடி ஆழத்தில் மின்சார இயந்திரங்களைக் கொண்டு குழி வெட்டப்பட்டு புதையல் தோண்டிய நிலையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு பொலிஸ் நிலைய பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய தகவலுக்கமைவாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமியின் திட்டமிடலுக்கு அமைவாக உதவி பொலிஸ் பரிசோதகர் விக்ரமசிங்கே தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விவசாய பண்ணைக் காணியொன்றில் சூட்சுமமான முறையில் இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பம்கள் இரண்டு, துளை கருவி இயந்திரம், வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள், வெடிக்கான திரிகள், பாரம் தூக்கி மோட்டார்,, வயர்கள், மோட்டார் சைக்கிள் – 4, மண்வெட்டி, சவள், வயர் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்