சுன்னாகம் பொலிஸ் பிரதேசம் மற்றும் கொடிகாமம் பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் விசேட புலனாய்வுப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் உடுவில் பகுதியைச் சேர்ந்த 22 முதல் 26 வரையான வயதுகளையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கொடிகாமம் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ஆம் திகதி உடுவில் அம்பலவாணர் வீதிப் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்குள்ள வீட்டின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது. சந்தேகநபர்கள் குறித்த திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
அதேபோல் கடந்த வருடம் அம்பலவாணர் வீதி, சுன்னாகம் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட உடுவில் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் குறித்த சந்தேகநபர்கள் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்திருந்தது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.