கனடா கிளிம்ப் பல்கலைக்கழகத்தில் கல்வி வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபா மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் இருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை ஜூன் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் திலின கமகே நேற்று முன் தினம் (24) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்த நிஷாமுதீன் மொஹமட் மொஹிதீன் நின்ஸர் மற்றும் கடுவெல ஹொரணதொட்டை, குலதுங்க கங்கனம்ல பிரதேசத்தை சேர்ந்த துஷாரிகா நெரஞ்சலி ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதவான், இந்த விடயம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பெருமளவானவர்களிடம் இருந்து 500 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.