கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

சிறந்த ஆளுமை கொண்ட ஆசான் ஆசிரியர் திரு.வே. அன்பழகன்!!

Anpalakan sir


மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் இறப்பது நிச்சயமே. ஆனால் அவன் இவ்வுலகிற்கு எதனை விட்டுச் சென்றான், என்ன செய்தியை அவனது இறப்பு இவ் உலகிற்குச் சொல்கிறது என்பதே நமக்குத் தேவையாகவுள்ளது. தன்னைப் பெற்ற தாய் தந்தையர்க்கு , ஊருக்கு, சமூகத்துக்கு நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழவேண்டும் என்பதே நல்லோரின் அவாவாகும். அந்த வகையில் தனது குடும்பத்தவர்களுக்கும் தான் கற்ற பாடசாலைக்கும் கல்விச் சமூகத்திற்கும் நல்லவனாகவும் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருந்த மனைவிக்கு உற்ற கணவனாகவும் வாழ்ந்து தமிழ் சமூகத்திற்கு நல்வழிகாட்டியாகவும் நற்பணியினை வழங்கி முழு மனிதனாக வாழ்ந்து சிறப்பான பணிகளை ஆற்றி அமரத்துவம் அடைந்துள்ளான்.

ஆரம்பக்கல்வி ஆசானாக நியமனம் பெற்று குழந்தைச் செல்வங்களுடன் குழந்தையாகவே தன் வாழ்வை அர்ப்பணித்த ஓர் உத்தமன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவச் செல்வங்களை அரவணைத்து  பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார். 
பரீட்சை முடிவடைந்ததும் எப்போது பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து பெறுபேறுகள் வெளியாகும் நாளன்று இரவு விழித்திருந்து அவற்றை விரைவாகப் பெற்று வெளியிடுவதிலும் மாணவர்களுக்குத் தெரிவிப்பதிலும் மிக ஆர்வமாக இருந்தவர்.

நாடு பூராவும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு மாதிரி வினாக்களையும் வழிகாட்டி நூல்களையும் வழங்கியதோடு மட்டுமன்றி பல பாடசாலைகள் கருத்தரங்குக்கு அழைத்த போது,  மறுப்பு எதுவும் தெரிவிக்காது திறம்பட நடாத்தி தேசிய மட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் பல சாதனைகள் பெற வழி செய்தவர்.  வசதி குறைந்த மாணவர்களை இனங்கண்டு  அவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பல்வேறு உதவியினையும் வழங்கிய உத்தமர்களில் முதன்மையானவராகவும் திகழ்ந்தார். 

அண்டி  வருவோருக்கு அரும்பசி போக்கி பொருள் உதவி நல்கி இன்பம் கண்டவர்.  நம் அனைவரதும் எண்ணத்தில் அமரர் ஓர் அறிவாளி. மனித நேயம் கொண்ட உத்தமர்.  சிறந்த ஆளுமை கொண்ட ஆசான்.  ஏழைகளுக்கு என்றும் உதவும் பரோபகாரி. அத்தகையவர் இன்று எம்முடன் இல்லை.  அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.

திரு. பொ. அற்புதரூபன்
ஓய்வுநிலை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர். 
இலங்கை பரீட்சைத் திணைக்களம். 
                          

அமரர் புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கு ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுவதால் அன்னாரின் கல்வெட்டிலிருந்து இக்கட்டுரை பிரதி செய்து இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button