தொடர்ச்சியாக வீசி வரும் இயன் சூறாவளியினால் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலம் ஈரலிப்பான அயன அயல் மண்டல காலநிலையை கொண்ட மாநிலமாகும்.
இந்தப் பகுதியில் காலாண்டுக்கு ஒரு முறை சூறாவளி மற்றும் வெள்ளம் ஏற்படுவது வழமையாகும்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இயன் சூறாவளியானது புளோரிடாவை ஊடறுத்து செல்லும் என அந்நாட்டு வளிமண்டலவியல் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதற்கமைய மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.
நேற்று மாலை புளோரிடாவின் Cayo Costa, அருகில் 12 அடி உயரத்தில் மணித்தியாலத்திற்கு 145 கிலோமீற்றர் வேகத்தில் இயன் சூறாவளியின் வேகம் பதிவாகியுள்ளதோடு, வெள்ளத்தில் மக்களின் உடமைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் வெள்ள நீரினால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதோடு, பல வீடுகள் முற்றாக நீரினால் மூழ்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.