குவாட் அமைப்பில் இலங்கையைச் சேர்ப்பதற்கு அமெரிக்கா முயற்சி!!
america
பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி இலங்கையை சீனாவுக்கு எதிரான குவாட் அமைப்பில் சேர்ப்பதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் றொபட் மெனமட்ஸ் குவாட் அமைப்பு நாடுகளான அமெரிக்கா , இந்தியா, அவுஸ்ரேலியா, யப்பான், ஆகியவற்றின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு எழுதிய கடிதம் மூலமே இந்த விடயம் அம்பலம் ஆகியுள்ளது.
அந்தக் கடிதத்தில் , குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் 4 நாடுகளும் வேண்டுகோள் விடுக்கும் வரை காத்திராமல் இலங்கைக்கு உதவ வேண்டும். அவ்வாறு செய்வதனூடாக குவாட்டின் ஆற்றல்கள் வெளிக்காட்டப்படும். இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் குவாட்டின் ஆற்றல்களை வெளிக்காட்ட இலங்கைக்கு உதவுவதில் குவாட் நாடுகள் முன்னிற்கவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “இலங்கையின் பொருளாதார நெருக்கடி – கடன்பிரச்சினைக்கு ராஜபக்ச சகோதரர்களும் சீனாவுமே காரணமென அவர் தெரிவித்துள்ளார். சகல சமூகங்களையும் சேர்த்த இலங்கையர்கள் இது மாற்றத்திற்கான நேரம் என்பதை வெளிக்காட்ட கிளர்ந்தெழுந்துள்ளனர்” எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இலங்கை நெருக்கடி நிலைமையில் இருந்து மீள ” மனிதாபிமான உதவி வழங்கல், எரிபொருள் வழங்குதல், நிதிக்கணக்கீடு, சுகாதாரம், உணவுப்பாதுகாப்பு – பெரும்பாக பொருளாதாரக் கொள்கை ஆகிய துறைகளில் தொழிநுட்ப ஆதரவு – ஆலோசனை வழங்கல் என்பவற்றைச் செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தவிர, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்தும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டுப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் குவாட் ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். குவாட் அமைப்பின் 4 நாடுகளும் இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இந்த வருடம் வெளியாகும் போது ஒன்றிணைந்த நிலைப்பாடு எடுக்கவேண்டும்.
பொறுப்பு கூறலுக்கான கடப்பாடு மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்தல் தொடர்பில் குவாட்டின் பற்றுறுதியை வெளிக்காட்ட ராஜதந்திர ஐக்கியம் உதவும் – என்றும் கூறியுள்ளார்.