இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அமெரிக்க இராஜாங்க திணைக்கள ருவிட்டர் பதிவு தமிழர்களுக்கு சாதகமாகவே தோன்றுகின்றது. தமிழரசுக்கட்சி செயலாளர் அறிக்கை!!

America

தமிழரசுக்கட்சி செயலாளர் அறிக்கை அமெரிக்க இராஜாங்க திணைக்கள “ருவிற்றர் “பதிவுகளை பார்க்கும்போது தமிழ் மக்கள் மீது யுத்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் நிரந்தர அரசியல் தீர்விற்கான அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது என தமிழரசுக்கட்சியின் பொது செயலாளர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

இன்று (26) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்ட குழு தமது இருதரப்பு கலந்துரையாடலில் கடந்த ஒரு வாரகாலமாக ஈடுபட்டு வருகிறது. இக் கலந்துரையாடலில் ஈடுபட்ட இருதரப்பினரும் கலந்துரையாடல் தொடர்பான விடயங்களை வெளிப்படையாக இதுவரை கூறவில்லை. இருந்தபோதிலும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள “ருவிற்றர் “பதிவுகளை பார்க்கும்போது தமிழ் மக்கள் மீது யுத்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் நிரந்தர அரசியல் தீர்விற்கான அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது. 
யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் உருப்படியான உறுதியான எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்பது இவ்வேளையில் நோக்கப்பட வேண்டும். நல்லாட்சி அரசு என்று சொல்லப்பட்ட அரசாங்கத்தின் காலத்தில் கூட எடுக்கப்பட்ட சில முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் முழுமைபெறவில்லை.
புதிய ஜனாதிபதி தேர்வும் அதனை தொடர்ந்து அமைக்கப்பட்ட அரசும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் தமது சிங்கள பெளத்த மேலாதிக்க வாதத்தையே தொடர்சியாக முன்னெடுத்து வருகிறது. இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் அரசியல், பொருளாதார, சமூக பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அவை எல்லாவற்றிகும் மேலாக எண்ணிகையில் சிறுபாண்மையாக இருக்கின்ற தமிழ் , முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் தமது இருப்பு தொடர்பான  பிரச்சனைகளிற்கும் முகம் கொடுக்க வேண்டியயுள்ளது. 
இவ்வாறான ஒரு சூழலில்தான் எமது விடயம் ஒரு சர்வதேச விவகாரமாக குறிப்பாக 2009ம் ஆண்டுக்குப் பின்னர் மாறியதும் அவ்வப்போது பேசுபொருளாவதும் நாமறிந்ததே.
அண்மைய பூகோள அரசியல் மாற்றங்கள், அவற்றினால் ஏற்படும் சர்வதேச தலையீடுகளால் எமக்கு விமோசனத்திற்கான வழி பிறக்குமா என்ற   எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அண்மைய அமெரிக்க விஜயம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களை பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருந்தபோதும் வழமையைப்போல இப்பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானதாக அமையுமா என்ற ஐயம் எம்மத்தியில் உண்டு.
அமெரிக்காவிற்கு சென்ற சுமந்திரன் குழுவினர் பேச்சுக்களில் ஈடுபட்ட தோடு திரு.சுமந்திரன் அவர்கள் கனடாவிற்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவருடன் பாராளுமண்ற உறுப்பினர் சாணக்கியனும் சேர்ந்துகொண்டார். அவர்கள் இருவரும் கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்ளுகின்றனர்.
அமெரிக்க பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எனக்கு புலம்பெயர் நண்பர் ஒருவர் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். அதில்  “பைடனுக்கான தமிழர் அமைப்பு ” என குறிப்பிட்டவர்கள் திரு.சுமந்திரன் குழுவினரின் அமெரிக்க விஜயத்திற்கான அழைப்பை இராஜாங்கத் திணைக்களம் விடவில்லை என்றும் சில அமைப்புக்களே அழைத்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சரி யார் அழைத்திருந்தாலும் எமக்கு ஒரு நண்மை நடக்குமானால் அதை நான் வரவேற்பேன் என கூறினேன்.
 இங்கு நான் குறிப்பிட விரும்பும் விடயம் என்னவெனில் சில கட்சிகளிற்கும் அமைப்புகளிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை என்பவற்றை அமெரிக்கா அழைத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி அழைத்ததானது அமெரிக்கா தமிழர்களின் பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பையும் உலகத் தமிழர் பேரவையையும் ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்ற எண்ணத்தை தோற்றுவித்துவிடும் என எண்ணியிருக்கலாம்.
 எனவேதான் சில அமைப்புக்களின் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவருக்கும் எதிராக சிலர் ஏற்பாடு செய்து நடந்த சம்பவங்களிற்கான ஆதரவை தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் மற்றவர்களிற்கு பகிர்ந்தும் கொண்டார்கள்.
பல கருத்துக்களை கொண்டவர்கள் அல்லது வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் கொண்டவர்கள் ஒன்றாக வாழக்கூடிய சனநாக அமைபில் தமது கருத்துக்களை சுதந்திரமாகவும் தடையின்றியும் வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் அனைவருக்கும் உள்ளது. இலங்கையில் அவ்வாறான நிலை இல்லாதபோதும் சனநாயக விழுமியங்களை பேனுகின்ற நாடுகளில் கருத்து சுதந்திரம் தாராளமாகவே உள்ளது. 
இவ்வாறாக தமது கருத்துக்களை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நாகரீகமாகவும் வெளிப்படுத்தக்கூடிய சூழல் இருந்தும் மிக அநாகரீகமான சொல் பிரயோகங்களை பயன் படுத்தியும் தனிப்பட்ட வகையில் ஒரு தனி மனிதனை இலக்கு வைத்து அவமானப்படுத்தும் வகையில் அமைதியின்மையை ஏற்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாததும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். 
 சுமந்திரன் அவர்களது வருகையை நாகரிகமாக எதிர்த்திருக்கலாம் அல்லது அங்கு நடந்த கூட்டத்தில் தமது சந்தேகங்களை அல்லது சுமந்திரன் மீதான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கலாம் அதனை விடுத்து மற்றவர்களின் தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி அநாகரிகமாக நடந்துகொண்டதை ஆரோக்கியமான அரசியல் செய்ய முற்படும் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 
சுமந்திரனுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய சம்பவம் கட்சி பேதங்களிற்கு அப்பால் எவருக்கும் ஏற்படக்கூடாது என தெரிவித்துள்ளார். 

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button