இமயமலை பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன அமெரிக்க விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் இந்தியா, சீனா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் விழுந்து காணாமல் போயிருந்தன.
அதற்கமைய, சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம், புறப்பட்ட சில மணி நேரங்களில் ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானது.
இந்நிலையில், குறித்த விமானம் இந்தியாவின் இமயமலை பகுதியில் விழுந்திருக்கலாம் என அண்மையில் தகவல் வெளியானது.
அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் மகன் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்ற குறித்த நபர், விமான தேடுதல் பணியை அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸிடம் ஒப்படைத்திருந்தார்.
அதன் அடிப்படையில் குக்லெஸ் தனது குழுவினருடன், இமயமலை பகுதியில் குறித்த விமானத்தை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.
இந்த பயணத்தில் குக்லேஸும், உள்ளூர் வழிகாட்டிகள் குழுவும் இணைந்து இமயமலை உச்சியில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய பகுதியில் இருந்த போர் விமான பாகத்தை இந்த குழு நேற்று (24) கண்டுபிடித்தது.
பனி படர்ந்த பாறைகளுக்கு நடுவே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அதனை அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குக்லெஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போயிருந்த குறித்த விமானம் 77 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.