வவுனியா மயிலங்குளம் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி கிராம சேவையாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று (08.12) காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
பண்டாரிக்குளம் தனது வீட்டில் இருந்து ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவிற்கு இன்று காலை கடமைக்கு சென்று கொண்டிருந்த போது மயிலங்குளம் சந்திக்கு அண்மித்த பகுதியில் உள் ஒழுங்கையிலிருந்து எதுவித சமிக்ஞைகளின்றி பிரதான வீதிக்கு கிரவல் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டையிழந்து கிராம சேவகர் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த ஆசிகுளம் கிராம சேவகரான பாலசுப்பிரமணியம் ஜனகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த வீதியில் டிப்பர் வாகனங்கள் தினமும் கிரவல் அகழ்வுப்பணிகளை மேற்கொண்டு வருவதால் அவ்வீதியில் அடிக்கடி விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு இடம்பெறும் விபத்துக்களைத் தடுத்து நிறுத்துவதற்குரிய பொறிமுறை ஒன்றினை உருவாக்கி அவ்வீதியால் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தியாளர் கிஷோரன்