கட்டுரை

கருக்ககலைப்பு – ஓர் சமூகவியல் நோக்கு!!

Abortion

ஸஹீட்.எம். சப்றீன்

நிம்மதி இல்லை நிம்மதி இல்லை என்று அலையக்கூடிய பெரும்பாலான மனிதர்கள் நிம்மதி காணும் ஒன்றாகவும் இன்பமடையும் ஒன்றாகவும் மழலைகள் காணப்படுகின்றனர். “குழந்தைப்பாக்கியம் என்பது கடவுளின் வரம்” என்னுமளவிற்கு அதன் முக்கியத்துவம் பலராலும் உணரப்பட்ட ஒன்றாகும். இயந்திர உலகில் களைப்படைந்த மனிதனுக்கு வீட்டிலே ஆறுதல் தரும் பொக்கிசம்தான் குழந்தைகள். ஆனாலும் அக்குழந்தைகளை வேண்டாம் என அலட்சியம் செய்கின்றவர்களும் எமது சமூகத்தில்தான் வாழ்கிறார்கள். இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடையை சர்வ சாதாரணமாக இல்லாமல் செய்துவிட்டு எவ்வித கவலை உணர்வுமின்றி அவர்கள் சாதாரணமாக திரின்றார்கள். நியாயமான சில காரணங்களைத்தவிர கருக்கலைப்பினை எந்தவொரு சமுதாயமும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை.


இன்றைய சமூகத்தில் பாரிய சமூகப்பிரச்சினைகளுள் ஒன்றாக உருவெடுத்துள்ள இந்தக் கருக்கலைப்பானது வெளிப்படையாகப் பேசப்பட வேண்டிய விடயமாகும். ஆனாலும் பல்வேறு காரணங்களுக்காக அது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக இதனை சரியென்றோ பிழையென்றோ வாதிடுவதானது பல்வேறுபட்ட சிக்கல்களையும் தோற்றுவித்திருக்கின்றது. இதனால் இதனைப்பற்றிய கருத்தாடல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. ஆனாலும் ஒரு சமூகப்பிரச்சினை என்ற வகையில் இக்கருக்கலைப்பு பற்றி பேசப்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


பொதுவாக கருக்கலைப்பு (Abortion) என்பது முளையம் (embryo) அல்லது முதிர்க்கரு (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக்கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர் அதனை கருப்பையிலிருந்து அகற்றி அழித்து விடுதல் என்பதை குறிக்கின்றது. மாறாக சில சந்தர்ப்பங்களில் முளையம் அல்லது முதிர்க் கருவானது கருப்பையின் உள்ளே இருக்கும்போது தானாகவே அழிந்துவிடுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் அது கருச்சிதைவு (Miscarage) அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு (Spontaneous Abortion) எனப்படுகிறது.

தானாக அன்றி ஏதாவது இரு நோக்கத்தோடு மேற்கொள்ளப்படுகின்ற கருக்கலைப்பானது தூண்டற் கருக்கலைப்பு (Induced abortion) எனப்படுகிறது. பொதுவாக கருக்கலைப்பு என்ற சொல் வேண்டுமென்றே செய்யப்படும் தூண்டற் கருக்கலைப்பையே குறித்துநிற்கிறது.


கருச்சிதைவு என்பதை எடுத்துக்கொண்டால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் முளையமோ அல்லது முதிர்கருவோ மேலும் உயிருடன் இருக்க முடியாத நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கின்றது. இது பொதுவாக கருத்தரிப்பின் ஆரம்பகாலத்தில் அதாவது கருக்காலத்தின் 20 கிழமைக்குள் தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாகும். இக்கால எல்லையானது நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடும். சில சமயம் இந்தக் கால எல்லை 24 கிழமைகளாகவும் நீடிக்கலாம். கருத்தரிப்பின் 23 கிழமைகளுக்குள் நிகழும் 500 கிறாம் நிறைவுக்குக் குறைவான முதிர்வுறா முதிர்கருவின் இழப்பை கருச்சிதைவென உல சுகாதார ஸ்தாபனம் வரைவிலக்கணப்படுத்துகிறது. ஓன்றுக்கு மேற்பட்ட கரு, கர்ப்பிணிக்கு ஏற்படும் நீரிழிவு நோய், சூலகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகள், கருத்தரிப்புக்காலத்தில் ஏற்படும் உயர் குருதி அமுக்கம், தைரொய்ட் சுரப்புக் குறைபாடு, குறைவான நோயெதிர்ப்பு சக்தி, மிகையான மது, கொக்கைன் மற்றும் புகையிலைப்பாவனை, கருத்தடை சாதனங்களை கருத்தரிபின்போது கொண்டிருத்தல், உடல் அதிர்ச்சி, கருத்தரிக்கும் பெண்ணின் வயதும் உடல் நிலையும், இயலவே கருச்சிதைவு நடந்திருத்தல் போன்ற இன்னும் சில காரணிகள் கருச்சிதைவில் செல்வாக்குச் செலுத்துபவனவாக இருக்கின்றன.


கருச்சிதைவில் 91.7 % கருச்சிதைவுகள் தாயை அறியாமலேயே இடம்பெறுகின்றன (W.H.O). இக்கருச்சிதைவானது சமூக ரீதியாக பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை மாறாக குறிப்பிட்ட பெண் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரோடு முடிவடைந்து விடுகிறது. குறிப்பாக தாய்க்கு மனக்கவலையையும் சில சமயம் உடல்ரீதியான சில சிரமங்களையும் ஏற்படுத்தி காலப்போக்கில் அது மறந்துவிடுகிறது. எனவே கருச்சிதைவானது பாரியதொரு சமூகரீதியான தாக்கத்தை எற்படுத்துவதாக அமையவில்லை என்பது தெளிவாகின்றது.
கருக்கலைப்பினை எடுத்துக்கொண்டால் இது குறிப்பிட்ட சில காரணங்களுக்காக வலிந்து மேற்கொள்ளப்படுவதாகும். காரணங்களின் அடிப்படையில் இதனை இரண்டாகப் பிரித்து நோக்கலாம்.

  1. சிகிச்சைக் கருக்கலைப்பு
  2. தேர்வுக் கருக்கலைப்பு
    மேற்படி இரு கருக்கலைப்புகளும் மனித சக்தியினால் மேற்கொள்ளப்படுவதாகும். சிகிச்சைக் கருக்கலைப்பினைப் பொறுத்தவரையில் தாய் சேயின் நலன் கருதி இக்கருக்கலைப்பானது மேற்கொள்ளப்படுகிறது. இக்கருக்கலைப்பு முற்றுமுழுதாக தாய் மற்றும் அவரது கர்ப்த்திற்கு காரணமானவரின் அனுமதியோடும் வைத்தியர்களின் ஆலோசனைகளோடும் மேற்கொள்ளப்படுவதாகும். இவ்வகையன கருக்கலைப்புக்கள் பின்வரும் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன.
    • கர்ப்பிணிப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து எற்படும் நிலையில்
    • கர்ப்பிணிப் பெண்ணின் உடல் மற்றும் உள நலம் கருதி.
    • உயிர்கொல்லும் நோய்களுடனோ அல்லது அங்கவீனங்களுடனோ பிறக்கப்போகும் குழந்தை என்று அறிந்ததன் பிற்பாடு.
    • பல் சூல் மற்றும் கருப்பைக்கு வெளியே கருக்கட்டல்.
    போன்ற சந்தர்ப்பங்களில் பதுகாப்பான முறையில் சத்திர சிகிச்சையின் மூலமோ அல்லது பாதுகாப்பான கருக்கலைப்பு கருவிகளை பயன்படுத்துவதன் மூலமாகவோ இக்கருக்கலைப்பானது மேற்கொள்ளப்படுகிறது. கருச்சிதைவினைப்போலவே இவ்வகையான கருக்கலைப்பும் ஒரு பாரிய சமூகப்பிரச்சினையாகவோ அல்லது பேசுபொருளாகவே கருதப்படவில்லை. மாறாக சில நியாயமான காரணங்களுக்காக சமூக ரீதியாகவும் சமயரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவும் இது காணப்படுகிறது. குழந்தையின் தன்மையை இயலவே அறிந்து அக்கருவினை கலைக்கின்ற விடயம் அதிகமாக மேலைத்தேய நாடுகளிலேயே காண்படுகின்றன. கீளைத்தேய நாடுகளில் அந்தளவிற்கு உயர்ந்த மருத்துவ வசதிகள் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதுபோலவே குழந்தை எவ்வாறிருப்பினும் அது இறைவனின் நாட்டம் என்ற உயர் எண்ணமும் சில சிந்தனையாளர்களிடத்திலே இக்கருக்கலைப்பை தவிர்ந்து கொள்ளல் சிறப்பு என்ற கருத்தும் காணப்படுகிறது. எது எவ்வாறிருப்பினும் இக்கருக்கலைப்பு விடயத்தில் அதிகம் செல்வாக்குச் செலுத்துபவராக மருத்துவரே காணப்படுகின்றார்.

கருக்லைப்புக்கான காரணங்களின் அடிப்படையில் இரண்டாவது கருக்கலைப்பான தேர்வுக்கருக்கலைப்;பு என்பது பின்வரும் சில காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.
• திருமணத்திற்கு முன்னரான கருத்தரிப்பு.
• எதிர்பாராத கருத்தரிப்பு.
• வன்புணர்வினூடான கருத்தரிப்புக்கள்.
• குறித்த பாலினக் குழந்தை வேண்டாம் என்ற தீர்மானம்.
• குழந்தையே வேண்டாம் என்ற தீர்மானம்.
• குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடல்.
• பொருளாதார நிலை(வறுமை).
• படிப்பு வேலைப்பழு மற்றும் சமூக அந்தஸ்த்துக்கள்.
• இருக்கும் குழந்தைகளைவிட மேலதிக குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவு.
• சமூக அங்கீகாரமற்ற உறவினூடான கருத்தரிப்பு.
மேற்கூறப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக இக்கருக்கலைப்பானது இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. சிகிச்சைக் கருக்கலைப்பினைப் பொறுத்தளவில் அது குறிப்பிட்ட நாடுகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதனால் சட்டபூர்வமாக பாதுகாப்பாக இடம்பெறுகிகன்றது. ஆனால் தேர்வுக்கருக்கலைப்பு என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. பொதுவாக அதிக நாடுகள் இக்கருக்கலைப்பினை சட்டரீதியாக அங்கீகரிக்கவில்லை. இவ்வங்கீகாரம் தொடர்பாகவும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் ஆய்வாளர்கள் மத்தியிலே காணப்படுகின்றன. ஆனாலும் நாம் இங்கு கருக்கலைப்பு எனும் வரையரைக்குள்யே எமது அவதானத்தை செலுத்துதல் சிறப்பாய் அமையும். கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் கருக்களை வளர விடுவதும் அழிப்பதும் கருக்களைச்சுமக்கும் பெண்ணின் உரிமை என்கின்றனர். மாறாக கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ முழையமோ முதிர்க்கருவோ மனித உயிருக்கு சமனானது என்றும் அதனை அழிப்பது கொலைக்கு சமனானது என்றும் வாதிடுகின்றனர்.


வாதப்பிரதிவாதங்கள் இவ்வாறிருக்க மேற்சொன்ன காரணங்களுக்காக கருக்கலைப்பை மேற்கொள்ள முடிவு செய்தவர்கள் கருக்கலைப்புக்கு என்ன செய்கின்றார்கள் என்ற வினா எழுகின்றது. சட்டரீதியான அனுமதி இல்லாத காரணத்தினால் நிச்சயமாக அதற்கென மாற்றுவழியொன்றை தேடத்தான் செய்கிறார்கள். அதைத்தான் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு என்கிறோம். ஆரம்பகாலத்தில் மக்கள் இவ்வகையான கருக்கலைப்பிற்காக மூலிகைகள், கூரிய ஆயுதங்களைப் பயன்டுத்தல், உடற்காயங்களை உண்டாக்குதல், மற்றும் மரபுசார் சில முறைகளையும் கைக்கொண்டனர்.

இம்முறைகள் தாய்க்கும் தாயின் கருப்பைக்கும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துபவையாக காணப்பட்டன. இன்றும்கூட பலர் இந்த மூடத்தனமான முறைகளைக் கையாண்டு தமது உயிர்களையும் விடக்கூடிய நிலையில் உள்ளனர். உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70 000 கர்ப்பிணிப்பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர் (W.H.O). உலக அளவில் ஆண்டு ஒன்றிற்கு நிகழும் சுமார் 4.4 கோடி கருக்கலைப்புக்களில் கிட்டத்தட்ட அரைவாசி பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களாகவே இருக்கின்றன(W.H.O).


மறுபுறம் பாதுகாப்பான கருக்கலைப்பு எனும்போது வளர்ச்சியடைந்த மருத்துவ உலகில் இன்று இதற்கென பல வழிமுறைகள் காணப்படுகின்றன. இக்கருக்கலைப்பு முறைகள் கர்ப்பகாலத்தைப் பொறுத்தும் கருவின் அளவினைப்பொறுத்தும் அந்தந்த நாடுகளின் மருத்துவச்சட்டங்கள் மற்றும் தனியார் விருப்பங்களுக்கேற்ப சரியான முறையில் தேர்வு செய்யப்படும். மருந்துகள், அறுவைச்சிகிச்சைகள், உறுஞ்சுதல் விரிவாக்கம் – சுரண்டி வழித்தெடுத்தலும் (Dilation and curettage) போன்ற பல்வேறு முறைகள் இன்று நவீன மருத்துவத்தில் கருக்கலைப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு பாதுகாப்பான முறையில் கருக்கலைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதுவும் பல்வேறுபட்ட பக்கவிழைவுகள் மற்றும் சில நோய்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவம் கூறுகிறது. குமட்டல் மற்றும் வாந்தி, அதிக இரத்தப்போக்கு, இடுப்பு வலி மற்றும் அதனோடு தொடர்புபட்ட கோளாறுகள். தொற்றுநோய்கள், கருக்கலைப்பின்போது எஞ்சிய கருவின் பகுதிகள் மற்றும் உறுப்புக்களுக்கு ஏற்படும் சேதங்கள் போன்ற பாதிப்புக்கள் பாதுகாப்பான கருக்கலைப்பாலும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.


பாதுகாப்பான கருக்கலைப்போ அல்லது பாதுகாப்பற்ற கருக்கலைப்போ எதுவாயினும் அவையும் மனித உயிர்கள்தான் என்ற கண்ணோட்டத்தில் நோக்கினால் ஒரு உயிரை க் கொல்லும் செயலை எந்த மனிதப் பிறவியும் செய்ய நினைக்காது. சில முக்கியமாக தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பாதுகாப்பான முறையான கருக்கலைப்பக்களை ஏற்றுக்கொண்டாலும் பொதுவான நோக்கில் கருக்கலைப்பு என்பது சமூகத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை. சமூக அங்கீகாரமற்ற சில உறவுகளின் ஊடான கருத்தரிப்பு, திருமணத்திற்கு முன்னரான கருத்தரிப்பு போன்ற சில விடயங்களை ஊக்குவிப்பதாக அது அமைந்துவிடும். அதுமட்டுமல்லாது இவ்வாறு இலகுவான வழிகள் இருப்பதுகண்டு அவ்வகையான கருத்தரிப்புக்கள் சமூகத்தில் மேலும் அதிகரிப்பதற்கு அது வாய்ப்பாகிவிடும்.

பெண்ணியம் மற்றும் Living together   போன்றவை பற்றிப் பேசும் இவ்வுலகில் கருக்கலைப்பு என்பது ஒரு பெண் உரிமை என்ற கருத்தும் காணப்படுவதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் இந்த விடயத்தில் பெண்ணுரிமை பார்ப்பதென்பது பல்வேறு விளைவுகளை சமூகத்தில் தோற்றுவிக்கக்கூடும்.


மாறாக சமயம் மற்றும் சமூகம் என்பவற்றைத் தாண்டி மனிதன் என்ற வகையில் சிந்தித்தால் கருக்கலைப்புக்கான வழிகளையோ அதன் வகைகளையோ நாடுவதனை விடுத்து வருமுன் காப்போம் என்ற தொனிப்பொருளில் கருத்தரிக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு முறைகளை அவரவரின் உடல்நிலை மற்றும் விருப்பங்கள் என்பவற்றிற்கு ஏற்ப தெரிவு செய்து அதனை மேற்கொள்ளவது ஓரளவிற்கு பாதுகாப்பாகவும் சமூகத்திற்கும் எந்தவகையிலும் பாதிப்பில்லாததாகவும் அமையும். இந்த விடயங்களிலும் பல சர்ச்சைகள் இருந்தாலும் கரு உருவாகிய பின் அதனை கொல்வதனைவிட அதனை உருவாகாமல் தடுப்பதென்பது பாதகம் குறைந்ததாக காணப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் ஒரு உயிரை ஆக்குவதும் அழிப்பதும் இறைவனின் செயல், அவன் நாடிய ஒன்றை அழிப்பதற்கு எவருக்கும் அனுமதி கிடையாது என்ற கருத்தே அனேகரின் மனதிலும் வேரூன்றியுள்ளது.

ஸஹீட்.எம். சப்றீன்

Related Articles

Leave a Reply

Back to top button