செய்திகள்நாவல்முத்தமிழ் அரங்கம்.

ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 16!!

Novel

 மெல்லிய கருமை படர சூரியனை விழுங்கிக் கொண்டிருந்தாள்  இருள் மங்கை.புலம்பெயர் எழுத்தாளரான லதா உதயன் எழுதிய ‘அக்கினிக் குஞ்சுகள்’ என்ற நாவலை வாசித்துக் கொண்டிருத்த தேவமித்திரன்,  கண்கள் கலங்க,  இறுதி அத்தியாயத்தில் விழிகளைப் பதித்திருந்தான்.
முடிவிடமாகிப்போன  முள்ளிவாய்க்காலின் கடைசி மணித்துளிகள் நெஞ்சில் நெருப்பென நிழலாடியது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும் அடிமையாகவும்  நிர்வாணிகளாகவும் நின்ற கோலம் ஒரு கணம் நினைக்கும் போதே மனதை உலுக்கியது..

கடந்த காலம் கண்முன்னே விரிய,  இரும்புக் குண்டென இதயம் கனத்தது.

சமையல் அறையில் இருந்து நெத்தலிக்கருவாடு பொரியும் வாசனை வரவே, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, எழுந்து வெளியே வந்தான் தேவமித்திரன்.

“அப்பா…..என்ன செய்யிறியள்?” நான் வந்து செய்வன் தானே, உங்களை ஆர் உந்த வேலை எல்லாம் செய்யச்சொன்னது?”.என்றான் அன்பு கலந்த கோபத்துடன்.

“ஏனப்பூ….எனக்கு இப்ப ஒண்டும் இல்லை,  நான் நல்லா குணமாகிட்டன், நீ சும்மா பயப்பிடாதை, ஆடின காலும் பாடின வாயும் சும்மா  இருக்காது.  வேலை செய்யாமல் இருந்தால் தான் வருத்தம் ஏதும் வந்திடும்…”

நீங்கள் ஓய்வெடுத்தால் தான் எனக்கு நிம்மதி, அதுதான் சொல்லுறன் அப்பா…..சரி..இப்ப என்ன செய்யிறியள்?”

“வேற ஒண்டும் இல்லை, கொஞ்சம் நெத்தலிக் கருவாடு தான் சின்ன வெங்காயம் போட்டுப் பொரிச்சனான். நீ காலையில வைச்ச கறியும்  கிடக்குத் தானே,  பாமதியிட்டைச் சொல்லி பிட்டு 2 குழல் பிட்டும்  5 இடியப்பமும் வாங்கினனான்”

“சரி அப்பா….வந்து இருங்கோ…..” என்று விட்டு
சமையல் அறைக்குள் நுழைந்து இருவருக்குமாக கோப்பி கலக்கி எடுத்து வந்தான்.

சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த தந்தையின் அருகில் கதிரை ஒன்றை இழுத்துப் போட்டபடி அமர்ந்தான்.

“என்ன தேவா, ஏதும் சொல்லவேணுமோ”  என்றார்.

” ஓமப்பா….அகரனின் விசயம் அண்டைக்குச் சொன்னன் தானே?”

“ஓமோம்….சொன்னனி தான்…அது நல்ல விசயம் தான்,  ஆனால்  அகரனோடை உன்ரை வாழ்க்கை முடியக்கூடாது,”

“அப்பா….நீதிமன்றத்திலை தினமும் தாபரிப்பையும் விவாகரத்தையும் பார்த்துப்பார்த்து எனக்கு,   கலியாண.வாழ்க்கையே வெறுத்துப்போச்சு”  என்றான்.

மகனின் அருகில் நெருங்கி அமர்ந்த தந்தை அவனுடைய கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டே,

“அகரனை நீ மகனாகத் தத்தெடுப்பது நல்லது, எனக்கும் சந்தோஷம் தான்,  ஆனால் உன்னுடைய வாழ்க்கைக்கு அகரன் மட்டுமே போதும் என்று நீ நினைக்கக்கூடாது,   உனக்கு ஒரு துணை வேணும் தேவா… என்ரை சந்ததி உன்னோடை   முடிஞ்சிடுமோ  என்றுதான் பயமா கிடக்கு.”

பெண் துணை என்றதும் சட்டென்று தேவமித்திரனின் மனதில் அந்த வைத்தியர்  பெண்ணின் முகம் ஒளிந்து மறைந்தது.

அப்பாவிடம் எதுவும் சொல்லாமலே எழுந்து உள்ளே சென்றான்.

நீண்ட நாட்களின் பின்னர் ஏனோ, முகநூல் பார்க்கவேண்டும் போல தோன்றவும் தனது லப்பொப்பை  உயிர்ப்பித்தான்.

நட்பு அழைப்புகள் பல வந்திருந்த போதும் வந்து சென்ற அழைப்பாக சமர்க்கனி என்ற பெயரிலான அழைப்பு காணப்பட அதனைத் தேடினான்.
“அட…நம்ம டொக்ரர் அம்மா…. ” புன்னகை ஒன்று பூவாய் விரிந்தது தேவமித்திரனிடம்.

தீ …..தொடரும். 

Related Articles

Leave a Reply

Back to top button