அன்று அவன் விடுப்பில் இருந்தான். ‘அப்பாவுக்கு திடீரென்று அசௌகரியம் ஏதும் ஏற்பட்டாலும் ‘ என்ற எண்ணம் ஒரு புறம் இருக்க, ‘பாமதி அக்கா தனியாக சமையல் வேலை செய்வா, முடிந்த உதவிகளைச் செய்து கொடுக்கலாம்’ என்ற எண்ணமும் மதிய உணவை முடித்து விட்டு, ‘காரைக்கொண்டு போய் தானே கொடுத்து விட்டு வரவேண்டும் என்ற ஆசையும்’ சேர்ந்து அன்று விடுப்பில் நிற்க வைத்தது.
அப்போது தான் துக்ககரமான அந்தச் செய்தி கிடைத்தது.
யாழ். பல்கலைக்கழகதில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அகற்றப்பட்ட தகவல் காட்டுத்தீ போல எங்கும் பரவி தேவமித்திரனுக்கும் வந்து சேர்ந்தது.
தகவலை அறிந்த தேவமித்திரனுக்கு இரத்தம் கொதித்துப் போனது.
ஒரு நினைவுச் சின்னத்தை அகற்றுவது எப்படிப்பட்ட மனோபாவம். நல்ல அரசியலுக்கு இது அடையாளம் அல்லவே.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் முன்னெடுப்பதை அறிந்து உடனே புறப்பட்டு விட்டான்.
மனதில் இருந்த சகல காரணங்களும் பின்னுக்குத் தள்ளப்பட, அவனது ஈருருளி காற்றைக் கிழித்து விரைந்து கொண்டிருந்தது.
மாணவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க அவசரமாக ஈருருளியை நிறுத்திவிட்டு இறங்கிய தேவமித்திரன், உள்ளே செல்ல, கூடி நின்ற மாணவர்களை இவனிடம் ஓடி வந்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது, தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் ஆகும்.
மேதைகளையும் வீரர்களையும் நெஞ்சுரம் மிக்க பற்றாளர்களையும் வளர்த்துக்கொடுத்த அன்னை மடி அது. பசித்திருந்து உயிர்ப்போர் புரிந்த பார்த்தீபனின் செந்தேகம் அங்கு தான் ஞானவாசம் செய்கிறது.
கல்விக்காக தனை ஈந்திருக்கிறான் அந்தக் கார்முகிலன்.
தமிழர்களின் வாழ்வியலில் யாழ். பல்கலைக்கழகம் ஆற்றும் பங்கு அளப்பரியது.
அதாவது, தமிழர்களின் உரிமைகளுக்கான குரல் அங்கிருந்து தான் கொடுக்கப்படுக்கிறது.
2009இல் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நினைவு கூர வேண்டும் என்ற தீராத பற்றோடு அமைக்கப்பட்ட தூபியை மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக.இடித்து அழித்திருந்தமையை பலரும் கண்டித்திருந்தனர்.
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையின் திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே இதுவும் பார்க்கப்பட்டது.
மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே தூபி அகற்றப்பட்டது என துணைவேந்தர் கூறிவிட மாணவர்கள் கொந்தளித்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள், சமூக மட்ட அமைப்புகள், தமிழ் அரசியல் சார்ந்தோர் என பல்கலைக்கழக வளாகம் நீதி கேட்டு நின்ற மக்களால் நிறைந்தது.
அத்தனை பேரில் தானும் ஒருவனாக.அதுவும் மிக முக்கியமான நபராக அங்கு நின்ற தேவமித்திரனின் நினைவுகள் இந்த தூபி அமைக்கப்பட்ட நாளை எண்ணியது.
எவ்வளவு பக்தியோடும் ஆத்மார்த்தமான நேசிப்போடும் இந்த தூபியை அமைத்தார்கள். ஆனால் இன்று இது இவ்வாறு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அழிக்கப்பட்டது மிக கொடிய செயலாகவே தோன்றியது.
மாணவர்களின் பெரும் கோஷம், பழைய மாணவர்களின் போராட்டம் இவை எல்லாம் சேர்ந்து அன்று மாலையே தூபியை மீண்டும் அமைப்பதற்கான அனுமதியைப்.பெறவைத்தது.
மறுநாள் தூபியை மீண்டும் அமைப்பதற்கான சகல ஆயத்தங்களையும் செய்து விட்டு தேவமித்திரன் வீடு வந்து சேர்ந்த போது நேரம் இரவு பத்து மணி.
அப்பா தூங்காமல் வாசலையே பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்க்க அவனுக்கு கவலையாகவும் கோபமாகவும் வந்தது.
என்னைப்பா….நித்திரை கொள்ளாமல் ஏன் முழிப்பு இருக்கிறியள்? நான் வருவன் தானே ?
“அதுக்கில்லை தேவா,. இன்றைக்கு நீ அங்க முன்னுக்கு.நிண்டு போராடியிருப்பாய்…..
வழியிலை தெருவிலை கவனமாக வந்து சேர வேணுமே என்டு தான் பார்க்கிறேன்” என்றார்.
பதில் ஏதும் கூறாது உள்ளே சென்று விட்டான்.
தீ …..தொடரும்.