தங்கத் தட்டாக ஜொலித்தபடி தனது பணிக்குப் புறப்பட்ட ஆதவன், பூமிப்பெண்ணை மெல்ல மெல்ல தன்னொளியால் வசியம் செய்துகொண்டிருந்தான்.
அதிகாலையின் புலர்வில் கண்விழித்த தேவமித்திரன் , மேசையில் இருந்த மின்குமிளை ஒளிரவிட்டுவிட்டு சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்து கொண்டான்.
‘ இன்னும் கொஞ்சம் தூங்கலாமே’ என உடலும் மனமும் கெஞ்சியது.
ஆனால், ‘அவன் படுத்துக்கொண்டிருந்தால் நிச்சயமாக அப்பா எழுந்து காலை வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிடுவார் ‘ என்பதை உணர்ந்து கெஞ்சிய உடலை கணக்கில் எடுக்காமல் எழுந்து அமர்ந்து விட்டான்.
‘காலை உணவை பக்கத்தில் உள்ள கடையில் வாங்கிவிட்டு, மதிய உணவை மட்டும் சமைத்து விடுவோம்’ என நினைத்தபடி, எழுத்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அப்பாவின் அறையில் எட்டிப் பார்த்தான்.
பெரிய கட்டிலில் இரண்டு பக்கமும் தலை அணையின் துணையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரைப் பார்த்து விட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.
பாவம் அப்பா…..அவனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே அம்மா நோயின் பாயில் சாய்ந்து படுத்து சாவை ஏற்றுவிட, அவனையும் தமக்கையையும் வளர்க்க எவ்வளவு பாடுகள் பட்டவர்…
பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவே மறுமணம் செய்யமாட்டேன் என அடம்பிடித்த அற்புதமான மனிதர்.
அதனாலேயே அதிகமாக அப்பா வழி உறவுகளை அவர்கள் இழந்திருக்கின்றனர்.
சிந்தனைகளுடனே வெளியே வந்தவன், படலையில் கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்தான்.
எதிர்வீட்டு பாமதி அக்கா நிற்கவும்,
“என்னக்கா….இந்த நேரத்தில்?” என்றான்.
“தேவா…..அப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு?
“இப்ப பரவாயில்லை அக்கா…”
“நல்லதடா…இப்பதான் நிம்மதியாக இருக்கு, இண்டைக்கு கனியாளனின் பிறந்த தினம்… ஏதோ என்னால் முடிந்த அளவில் ஓரிரண்டு பேருக்கு சமைத்து சாப்பாடு குடுப்பம் என்று நினைக்கிறேன்….மதியம் நான் சாப்பாடு கொண்டு வந்து தாறன்…நீ சமைக்க வேண்டாம் என்று சொல்லிப்போட்டு போகத்தான் வந்தனான்…இந்தா…இதிலை இடியப்பம் இருக்கிறது. காலையில் சாப்பிடுங்கோ” என்றதும்,
‘அக்கா….ஏன் உங்களுக்கு சிரமம்….நான் கடையிலை காலைச் சாப்பாடு வாங்கத்தான் இருந்தனான்…’
“ஏனடா….ஒரு தேவை எண்டால் அக்கம்பக்கத்திலை உதவி கேட்கக்கூடாதோ…அயல் என்னத்துக்கடா….அவசரத்துக்கு உதவத்தானே…. ”
“அதுக்காக மற்றவர்களுக்கு நாங்கள் கரைச்சல் குடுக்கலாமே…”
“நீ என்னை ஒப்புக்குத்தான் அக்கா எண்டு சொல்லுறாய் போல…உண்மையான பாசம் எல்லாம் இல்லைத் தானே…”
“அக்கா….என்னக்கா இப்படிச் சொல்லிப்போட்டியள்…”
“பிறகென்னடா….உண்மையில் உன்ரை அக்காமாதிரி என்னையும் நினைச்சால் பேசாமல் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போ….”
பாமதி அக்கா சொன்னபோது அவனால் மறுக்க முடியவில்லை.
“சரி அக்கா..மிக்க நன்றி…” என்றான்.
“அட….பிறகும் பார்….நன்றியாம்…எனக்கு அதொண்டும் வேண்டாம்…நீயே கொண்டு போ ….”
பாமதி அக்கா கூறிவிட்டுச் சென்றுவிட,
இடியப்பம் இருந்த கிண்ணம் அதிகம் கனப்பது போல இருந்தது அவனுக்கு…வேறொன்றும் இல்லை…அன்பின் சுமைதான் அது…
அறைக்குள் வந்தவன்…சிறிய மேசையில் இருந்த கார்ச் சாவியைப் பார்த்து விட்டுத்தான்.,
‘அடடா….அந்த வைத்தியர் பெண்ணிடம் காரைக்கொடுக்கப் போகவேண்டுமே’ என நினைத்தான்.
அவசர நேரத்தில் அந்த வைத்தியர் செய்த உதவிக்கு வெறுமனே காரைத் திருப்பி கொடுப்பது சரியில்லை என நினைத்தவன்,
அவனுடைய நன்றி அறிவிப்பாக அவளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என நினைத்தான்.
என்ன கொடுப்பது….என்ற ஆழமான யோசனையில் ஒவ்வொன்றாக நினைப்பதும் நிராகரிப்பதுமாக இருந்தவன்…
‘அடடா…நான், ஒரு ஓவியன் ஆயிற்றே….ஓவியம் ஒன்றைப் பரிசளிக்கலாம்’ என நினைத்ததும் பெரும் பிரகாசம் அவனுடைய முகத்தில்.
தன்னுடைய வரைதல் அறைக்குள் நுழைந்து பெரிய வெள்ளைத்தாள் ஒன்றையும் பென்சில் மற்றும் வர்ணங்களையும் எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்தான்.
அவள் ஆசைப்படும் அழகான குடும்பம் ஒன்றை ஓவியமாகத் தீட்டத் தொடங்கினான் தேவமித்திரன்.
தீ …..தொடரும்.