மிகவும் வேகமாகச் சீரழிந்து செல்லும் இன்றைய இளைய சமூகத்தை பாதுகாக்கும் எண்ணத்தில் அறநெறிப் பாடசாலைகளையும் ஆலயத்தின் செயற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தும் நோக்கில்,
தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த விசேட கூட்டத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் ஆற்றிய உரையின் முழு வடிவம்.
சமீப காலத்தில் சைவக் கோவில்களில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான பிரச்சினை ஒரு கோவிலிலும் தற்பொழுது பிரசங்கம் கிடையாது சைவ நற்சிந்தனை கிடையாது என்பதே ஆகும்.
எல்லா கோவில்களிலும் கட்டட வேலைகள் நடக்கின்றன,. ஆனால் ஆலய நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு கூட ஆலயத்தின் பல மகத்துவங்கள் பற்றி தெளிவாக தெரிவதில்லை. எந்த விக்கிரகம் எதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சரியான முகூர்த்தங்கள் என்ன?
மற்றும் புராண இதிகாசங்களின் மகிமை என்ன? விரதங்களின் மகிமை என்ன? என்று சொல்லக் கூடிய தகுதி ஆலய நிர்வாகிகளுக்கு கூட அற்ற அவலம் தற்காலத்தில் நிலவுகின்றது.
எனது முதலாவது அறிவுரை உங்கள் ஆலயம் சிறிதாக இருக்கலாம் பெரிதாக இருக்கலாம் உங்கள் ஆலயத்தினை சுற்றி இருக்கின்றவர்களை அழைத்து அது வெறும் 10 நபர்களாக இருந்தாலும் உங்கள் ஊரில் உள்ள ஒரு ஆசிரியரை அழைத்து ஒரு சிறிய நற்சிந்தனையை ஏற்பாடு செய்யுங்கள்.
இதனை ஆலய அறங்காவலர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அறிவுரைகளை செவி வழியாக கேட்டு செவி வழியாக விட்டு விட்டு செல்லாமல் இதனை கட்டாயமாக நடைமுறைப் படுத்துங்கள்.
உங்களுக்கு தெரியும் முன்பு சிறிய ஆலயமாக இருந்தாலும் வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப் பிரர்த்தனை நடைபெறுவதும் அந்த ஊரில் உள்ள பெரியவர் கொஞ்ச நல்ல விடையங்களை சொல்லுவதும் பெரிய ஆலயங்களில் பிரசங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் இருந்தது.
தற்காலத்தில் ஆலய சிவாச்சாரியார்கள் பிரசங்கம் வைக்க வேண்டாம் எங்களுக்கு நேரம் இல்லை என்று சொல்லும் அவலம் நிகழ்கின்றது.
ஆலய கும்பாபிஷேக பத்திரிகையில் கூட ஒலிபெருக்கி கட்டுறவனின் பெயர் கூட இடம்பெறுகின்றது பிரசங்கத்திற்கு இடமே இல்லாமல் போய்விட்டது.
இந்த நடைமுறைகள் எல்லாம் சமீப காலமாக ஆலயங்களில் நடக்கின்ற அவலமாக உள்ளது. பழைய காலத்தில் உள்ள கும்பாபிஷேக பத்திரிகையை எடுத்துப் பாருங்கள் என்ன மாதிரி இருக்கின்றது தற்காலத்தில் என்ன மாதிரி இருக்கின்றது என.
அறங்காவலர்களே உங்களுக்கு ஒரு நட்டமும் இல்லை வெள்ளிக்கிழமைகளில் ஒரு கொத்து அரிசி போட்டு ஆலயத்தை சுற்றி இருக்கின்ற சிறுவர்களை அழைத்து ஒரு சின்ன கூட்டுப் பிரார்த்தனை நடத்துங்கள் ஆகக் குறைந்தது சிவபுராணம் பாட வையுங்கள்.
இதை நீங்கள் செய்யாமல் ஆலயத்தை பூட்டி நீங்கள் திறப்பு எடுக்கின்றதால் எந்த நன்மையும் இந்த சமூகத்திற்கு கிடைக்கப்பேவதில்லை.
அறங்காவலர்களும் நிர்வாகிகளும் ஆலயங்களுக்கு நிறைய பூட்டுகளை வாங்கி பூட்டி அதன் திறப்புக்களை இடுப்பில் கொண்டு திரிகின்றார்களே அல்லாமல் சமயத்தை வளர்க்கவில்லை.
அதிலும் திறப்பை யார் வைத்திருக்கின்றது என சண்டை போட்டுக் கொண்டு திரிகின்றார்கள்.
ஒரு காலத்தில் ஆலயங்கள் அனைத்தும் அகலத் திறந்திருந்த ஆலயங்கள் இன்று பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளார்கள். தற்போது தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தை அதிகாலை தொடக்கம் மாலை வரை திறந்து வைத்திருக்கின்றோம்.
எந்த அடியவரும் அதிகாலை 5.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை சுற்றிக் கும்பிட முடியும். பக்கதர்களுக்குதான் ஆலயமே தவிர நிர்வாகிகளுக்கு அல்ல.
ஆனால் பலர் வைத்தியரை சந்திக்கும் நேரம் போல நேர அட்டவனை வைத்துள்ளார்கள் காலையில் சாமிக்கு பூட்டு மதியம் சாமிக்கு பூட்டு என ஆலயத்தை பூட்டு போட்டே வைத்துள்ளார்கள்.
உங்கள் ஊரியில் உள்ள ஓய்வூதியர்களை அழைத்து கால நேரங்களுக்கு ஏற்ப ஆலயங்களை முழுமையாக திறந்து வைத்திருங்கள்.
பல வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் தெரிவிக்கும் குற்றச் சாட்டு தற்காலத்தில் எல்லா கோவில்களும் பூட்டி இருக்கின்றது. ஒரு அர்ச்சனை செய்வம் என்று போனால் பூட்டி இருக்கின்றது ஆலயங்கள்.
தற்காலத்தில் மனிதன் மிக வேகமாக இயங்குகின்றான் அவனுக்கு நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் வந்து சாமியை வணங்குவான் எனவே ஆலயங்களை பூட்டு போட்டு பூட்ட வேண்டாம்.
அடுத்து எனது அறிவுரை ஆலயங்களை சுத்தமாக வைத்திருங்கள். சிவத்தமிழ் செல்வி அவர்கள் அமைத்த பெண்கள் தொண்டர் சபையினர் எமது ஆலயத்தின் ஒவ்வொரு பூசைப் பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்து வைப்பார்கள்.
ஒவ்வொரு செய்வாய்க்கிழமை பூசைக்கு முன்பதாக அனைத்து ஆலய பூசைப் பொருட்களும் நன்றாக பள பளவென மினுங்கும்.
தற்காலத்தில் பல ஆலயங்களில் பார்த்துள்ளேன் கடவுளுக்கு காட்டுகின்ற தீபத்தில் உள்ள அழுக்குகளை பார்த்தால் இதை ஏன் இறைவனுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது அந்தளவிற்கு சக்கு பிடித்துபோய் உள்ளது.
இறைவுக்கு காட்டுகின்ற தீபத்தை கூட மினுக்குவதற்கு நிர்வாகத்தால் முடியவில்லை என்றால் எதற்காக ஆலயங்கள்?
தயவு செய்து ஆலய நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஆலய பூசைப் பொருட்களை சுத்தப்படுத்த உங்கள் ஊரில் உள்ள 5 பெண்களை ஏற்பாடு செய்யுங்கள்.
நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடி
முன்பு ஆலயங்கள் எல்லாம் அழகாக சுத்தமாக மெழுகினார்கள் ஆனால் தற்காலத்தில் எல்லாம் சிமெந்து ஆகிவிட்டது ஆனால் சுத்மில்லை.
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த சிறுவன் ஒருவன் ஒரு ஆலயத்தில் பிரசாதம் கொண்டு வந்த பாத்திரத்தில் உள்ள அழுக்குகளை பார்த்து Dirty என்று பேசுகின்றான்.
பிரசாதம் என்பது பிரம்மத்திற்குரிய சாதம் அது எந்தளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அதனை கூட கவனிக்காமல் ஆலயம் நடத்துகின்றார்கள் சிலர்.
அடுத்து ஆலய அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் மிக முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய விடையம் ஆலய சுற்றாடல்களில் இருக்கும் மக்களை நேசிக்க வேண்டும்.
உங்கள் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு மாணவன் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றால் உங்கள் ஆலயத்தால் ஒரு கொப்பி ஒரு பேனாவை பாராட்டி பரிசாக கொடுத்தால் அந்தப் பிள்ளைக்கு ஆலயத்தில் ஒரு பற்று வரும்.
மக்களிடம் பணம் வாங்கி வாங்கி வங்கிகளில் நிரப்ப வேண்டாம். நான் தலைவராக இருக்கும் போது போட்ட பணத்தை அடுத்த தலைவர் வந்து எடுத்து செலவு செய்து விட்டார் என சண்டை போட வேண்டாம்.
வங்கிகளில் நிரப்புவதற்கல்ல பணம். ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் ஆலயத்தின் பெயரால் நல்ல பல கருமங்களை ஆற்ற வேண்டும்.
தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் வாரத்தின் இரு நாட்கள் அன்னதானம் வழங்குகின்றோம் பல அன்பர்கள் எமது பணிகளை பார்த்து தாமாகவே முன்வந்து பல உதவிகளை செய்கின்றார்கள்.
நல்லவற்றை செய்ய ஆரம்பித்தால் மக்கள் தமாக முன்வந்து உதவி செய்வார்கள்.
ஒரே நாளில் கும்பாபிஷேகத்திற்காக கோடிக் கணக்கில் பணத்தை செலவு செய்து விட்டு மறுநாள் சாமியையும் மக்களையும் பட்டினி போட வேண்டாம். சரியாக திட்டமிட்டு நல்லவற்றை செய்யுங்கள்.
அடுத்தது ஆலங்கள் ஊடாக அறநெறி பாடசாலைகளை நடத்துங்கள் இந்து காலாசார திணைக்களம் அறநெறி பாடசாலைகளை ஊக்குவிக்க பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது.
அதனை விட மேலதிக உதவிகள் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் சிறப்பாக செயல்படுவதாக பிரதேச செயலாளர் சிபார்சு செய்தால் நாங்கள் துர்க்காதேவி ஆலயத்தால் பல உதவிகளை வழங்க தயாராக உள்ளோம்.
ஒவ்வொரு ஆலயத்தாலும் அறநெறி பாடசாலைகளை நடாத்தும்போது அந்த மாணவர்களே அந்த ஆலயத்தின் அறப் பணிகளை மேற்கொள்வார்கள்.
ஒரு ஆலயத்தால் அகக் குறைந்தது 5 பிள்ளைகளை தன்னும் வளப்படுத்த முடியவில்லை என்றால் அந்தக் கோவிலை நடாத்துவதால் எந்தப் பயனும் இல்லை.
அடுத்து மிக முக்கியமான விடையம் ஆலயப் பொருட்களுக்கான பொருட் பதிவேட்டினை சிறப்பாக பராமரிப்பது.
ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள சொத்துக்களையும் வருமானங்களையும் செலவுகளையும் மிகவும் முறைப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் அதனை மேற்கொண்டால் அந்த ஆலயத்தின் மீது ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படும்.
வலி வடக்கில் சில ஆலயங்களில் உள்ள பொருட்கள் களவு போன பின்பு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அவ்வாறு களவு போல பல சாமி விக்கிரகங்கள் கொழும்பில் இருப்பதாக சொன்ன போது துர்க்காதேவி தேவஸ்தானத்தால் 65,000 ரூபா செலவு செய்து அவற்றை இங்கு கொண்டு வந்து
களவு போன உங்கள் விக்கிரகங்களின் அளவு மற்றும் விபரங்களை சொல்லுங்கோ என கேட்டால் அறங்காவலருக்கும் நிர்வாக உறுப்பினர்களும் பதில் சொல்ல முடியாத வகையில் நிற்கின்றார்கள்.
அவர்களுக்கு அவர்களின் ஆலயங்களில் உள்ள பொருட்கள் பற்றி விபரங்கள் சரியாக தெரியாது.
எனவே ஆலயங்களில் உள்ள ஒவ்வொரு பொருட்கள் பற்றியும் விரிவான தகவல்களை எடுத்து அவற்றை ஒவ்வொரு வருடமும் மேற்பார்வை செய்ய வேண்டும்.
உங்கள் ஆலயங்களில் உள்ள நகைகளின் விபரங்கள் என்ன என்று கேட்டால் தெரியாது என்று சொல்லுகின்றார்கள் ஆலய நிர்வாகிகள்.
பல ஆலயங்கள் வான வேடிக்கைக்கும் ஆடம்பரத்திற்கும் பல இலட்சங்களை செலவு செய்கின்றார்கள் ஆனால் நாங்கள் துர்க்கை அம்மன் ஆலயத்தில் அந்த நிதியை அன்னதானத்திற்கு செலவு செய்கின்றோம்.
உங்கள் ஊரில் உள்ள ஆகக்குறைந்து 10 பிள்ளைகளை தன்னும் உங்கள் ஆலயத்திற்கு அழைத்து தேவாரம் பாடச் சொல்லுங்கோ ஆலயங்கள் திருத்தினால் நமது சமூகம் தானாக திருந்தும்.
சிலர் சுப்பிர பாதத்தை ஒலி பெருக்கியில் ஒலிக்க விட்டு அவர்கள் தங்கள் பாட்டினைப் பார்க்கின்றார்கள் இதனனால் யாருக்கு என்ன நன்மை?
ஆலயங்களில் நிர்வாக பதவிகளுக்காக சண்டை பிடித்து எவருக்கும் ஒரு பயனும் இல்லை. நான் பல ஆலயங்களில் பொறுப்பு வகிக்கின்றேன் என்னிடம் ஒரு திறப்பும் இல்லை. ஆனால் அவை அனைத்தும் மிகவும் சிறப்பாக இயங்குகின்றது.
மற்றவர்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிறரிடமும் ஒப்படையுங்கள் அதைவிடுத்து எல்லா திறப்புக்களையும் நானே கொண்டு திரிவன் என நினைத்தால் ஒன்றும் நடக்காது.
அடுத்தது சகல ஆலயங்களிலும் ஒரு அலுமரியைப் பாதுகாத்து திருமுறைப் புத்தகங்களை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆலய கும்பாபிஷேக மலர்கள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை முறைப்படி பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் பெரிய ஆலயங்களுக்கு சென்று உங்களிடம் ஏதாவது புத்தகங்கள் இருக்குதா என கேட்டால் திருவம்பா புத்தகம்தான் உங்க செருகி வைத்தனாங்கள் என பொறுப்பற்ற வகையில் பதில் சொல்கின்றார்கள் வேறு புத்தங்கள் ஒன்றுமில்லை.
10 கும்பாபிஷேசங்கள் நடத்தியிருப்பார்கள் ஆனால் ஒரு கும்பாபிஷேக மலர் கூட ஆலயங்களில் இருக்காது.
தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தால் திருமுறை புத்தகங்களை அச்சிட்டு ஆலயங்களுக்கு இலவசமாக வழங்கினோம் ஆனால் இன்று அந்த நூல்கள் எங்கே வைத்துள்ளீர்கள் என கேட்டால் தெரியாது என பதில் சொல்கின்றார்கள்.
21ம் நூற்றாண்டில் இந் சமூகத்தை ஏமாற்றாமல் சமூகத்திற்கு நன்மையினை செய்ய பழகிக் கொள்ளுங்கள்.
தற்காலத்தில் பல ஆலயங்கள் எங்களின் அடிப்படை மரபுகளை மறந்து விட்டார்கள். ஆலய உற்சவங்களின் போது மாவிலைத் தோரணங்களை காண தற்காலத்தில் முடிவதில்லை.
அண்மையில் பல கோடிகளை செலவு செய்து நடந்த கும்பாபிஷேசகத்திற்கு சென்ற போது அங்கு மாவிலைத் தோரணங்களை காண முடியவில்லை.
புதுவருடம், தீபாவளி, தைப்பொங்கல் என எதற்கும் மாவிலை தோரணம் இல்லை என்றால் எதற்கு கோவில்?
மாவிலை தோரணத்திற்கு அர்தமே மங்களம் உண்டாகும் என்பதாகும். மரபுகளை மறந்து ஆலயங்களை நடத்தாமல் மரபுகளுடன் அதனை நல்ல சமூக நிறுவனமாக நடத்துங்கள்.
தற்காலத்தில் பல ஆலயங்களில் மங்களமே இல்லை வெறும் சண்டைகளாகவே உள்ளது.
எனக்கு உள்ள மிகப் பெரிய கவலை என்னவென்றால் நாங்கள் பல மரபுகளையும் அடிப்படைகளையும் தொலைத்து விட்டோம்.
கட்டுவன் பாலர் ஞானோதய சபை 1923ம் ஆண்டு நடாத்திய நிகழ்ச்சி பற்றிய தகவல்களை நான் இந்து சாதனத்தில் வாசித்தேன் உங்கள் ஆலயங்கள் பற்றிய வரலாற்றை நீங்கள் பாதுகாக்க வேண்டும் அவற்றை முறையான பேண வேண்டும்.
பாருங்கள் 1923ம் ஆண்டே பல சபைகளை உருவாக்கி பல தொண்டுகளை செய்து சமூகத்தை நல் வழிப்படுத்தியுள்ளார்கள் எம் முன்னோர்கள் ஆனால் 21ம் நூற்றாண்டில் கோவில்கள் யாவும் பூட்டில் கிடக்கின்றது.
தயவு செய்து ஆலயங்களை சார்ந்த அறங்காவலர்கள் மிகுந்த அக்கறை எடுத்து ஆலங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் ஆலயங்களை சுத்தமாக வைத்திருங்கள்.
சமூகத்தை நல்வழிப்படுத்தும் சமூக தொண்டு நிறுவனமாக செயல்படுங்கள். உங்களுக்கு எதாவது உதவி தேவை என்றால் நாங்கள் உதவி செய்ய எப்பொழுதும் தயாராகவே உள்ளோம்.
சிவசொரூபன்
பிரதி பண்ணப்பட்டது