அதிகாலைப்பொழுது அமைதியாக மலர்ந்தது. மெல்லிய காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. நகரை அண்டி அமைந்திருந்த தேவாலய மணி ஒலித்து ஓய்ந்தது. பேருந்துகளின் சத்தமும் பேப்பர் போடுபவரின் மணி ஒவியும் மாறி மாறிக் கேட்டது.
நேரம் அதிகாலை 5 மணியை நெருங்கும் முன்னரே அலாரம் வைத்தது போல கண் விழித்தான் தேவமித்திரன்.
கண்மூடி சில நிமிடங்கள் மௌனமாக இருந்தவன், காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சில சட்டப் புத்தகங்களையும் குறிப்பு எழுதும் கொப்பியையும் எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்தான். அன்றைக்கு, தான் கதைக்கவேண்டிய வழக்கு சம்பந்தமாக ஆராய்ந்தவன், அவற்றுக்கான குறிப்புகளை எழுதத் தொடங்கினான். குற்றங்கள் பற்றிய கோப்புகள் குவிந்து கிடந்தன.
“நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்து விட்டால் வக்கீல்களுக்கு வேலை இல்லை ” என எப்போதோ வாசித்தது நினைவில் வந்தது அவனுக்கு. சின்னச் சிரிப்பு ஒன்று அவனுடைய உதடுகளை ஆக்கிமித்தது.
சட்டத்தரணியாக அவன் பணியை ஆரம்பித்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. இந்த ஐந்து வருடங்களில் மனச்சாட்சிக்கு விரோதமாக ஒரு தடவை கூட அவன் வாதாடியது கிடையாது. அதனால் அவன் சந்தித்த இடர்கள் ஏராளம்தான்.
சில விரோதிகளையும் சம்பாதித்திருந்தான்.
‘யதார்த்தவாதி வெகுசன விரோதி’ என்பது சும்மா வந்த வார்த்தை அல்ல என அவன் பல தடவைகள் நினைத்திருக்கிறான்.
சிறு வயதில் அன்னையை இழந்து விட்ட அவன் , தந்தையின் புடம்போடப்பட்ட வளர்ப்பில் உருவானவன்.
ஒரே சகோதரியை காணாமல் போனவர்கள் பட்டியலில் கொடுத்து விட்டு அவனும் தந்தையுமாக வாழ்கின்றனர்.
விடியலின் வெளிச்சம் பரவத்தொடங்க, எழுந்து வெளியே வந்தான். தோட்டத்தில் தந்தையார் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவரருகில் சென்று, “அப்பா , காலை வணக்கம் ” என்றான்.
“வணக்கம்…வணக்கம்…வா…வா…தேவா” என்றபடி பூமரங்களுக்கு நீர் இறைத்துக் கொண்டிருந்த தந்தையாரிடம், ” இவ்வளவு நேரத்தோடை இந்த வேலையைச் செய்யவேணுமே அப்பா….அப்பிடி என்ன அவசரம், கொஞ்சம் விடிஞ்ச பிறகு செய்யலாம் தானே? ” என்றான்.
” இல்லை ஐயா…..இண்டைக்கு கிளிநொச்சி., கந்தசாமி கோயிலடியிலை எங்கட பேரணி ஒன்று இருக்கு, போகவேணும், அதுதான் வேளைக்கு இந்த வேலையைச் செய்து.போட்டு, சமையலையும் முடிச்சுப்போட்டு போவம் எண்டு….”
“சரி அப்பா…..நேரம் காணாதெண்டால் நீங்கள் வேளைக்கு வெளிக்கிடுங்கோ, நான் இண்டைக்கு கடையிலை சாப்பிடுறன் ” என்ற மகனிடம்,
” ஏனப்பு ……வேண்டாம்….வேண்டாம்……உனக்கு கடைச்சாப்பாடு சரிவராது, பிறகு கரைச்சல், நான் சோறு வடிச்சிட்டன், இரவே கத்தரிக்காய் பொரிச்சு வைச்சனான், ஒரு குழம்பு தானே, ஊறுகாய், தயிர் எல்லாம் கிடக்கு, வடிவாச் சாப்பிடு, ” என்றார்.
“நீங்கள் சாப்பாடு கொண்டு போகவேணுமோ?” என்ற மகனிடம்,
“இல்லை ஐயா……அங்கை, ஒவ்வொருவர் ஒவ்வொரு வசதி நிலை, நான் பகட்டா கட்டிக்கொண்டுபோய் சாப்பிடுறது சரியில்லை, அங்க என்ன தருகினமோ அதையே சாப்பிடுவம்…” என்றார்.
” அப்பிடி எண்டால் நான் கறியை வைக்கிறன், நீங்கள் வேளைக்கு வெளிக்கிடுங்கோ, பேரணி தொடங்க முதல் போக வேணும் தானே, கத்தரிக்காய் புளிக்குழம்பு நான் நல்லா வைப்பன், வந்து சாப்பிட்டுப்போட்டு சுவை எப்பிடி எண்டு சொல்லுங்கோ என்ன” என்றபடி கருவேப்பிலை, இறம்பை இலை இவற்றை ஆய்ந்துகொண்டு சமையலறை நோக்கிச் செல்லவும் தந்தையும் குளியலறைக்கு விரைந்து சென்றார்.
விரைந்து சமையலை முடித்து விட்டு தனக்கும் தந்தைக்குமாக தேவமித்திரன் தேனீருடன் வரவும் அப்பா குளித்து தயாராகி வரவும் சரியாக இருந்தது.
தொலைக்காட்சியை உயிர்ப்பித்து காலைச்செய்தியை ஒளிர விட்டுவிட்டு தந்தை கொண்டு செல்லும் பையில், தண்ணீர் போத்தல், பிஸ்கட் பைக்கற் ஒன்று., சிறு மருந்துப்பை என்பவற்றை எடுத்து வைத்தான். அதன் பின்னர்,
இருவருமாக கதைத்தபடி தேநீர் குடிக்க ஆரம்பித்தனர்.
அவசரமாக குடித்து முடித்து விட்டு எழுந்த தகப்பனாரை பேருந்தில் வழி அனுப்புவதற்காக கூட நடந்தான் தேவமித்திரன்.
அதென்னவோ, அப்பா எங்கே புறப்பட்டாலும் கூடவே சென்று வழி அனுப்பினால்தான் அவனுக்கு திருப்தியாக இருக்கும்.
தீ தொடரும்…….