கட்டுரைசெய்திகள்

உயிரை உலுக்கும் வீதி விபத்துகள் – மனதை கனக்கவைக்கும் உண்மைகள்!!

Artcle

‘இன்றிருப்பார் நாளை  இல்லை ‘   என்ற நிலை  தற்போது அதிகரித்து வருகின்றது.  காரணம் அன்றாடம் இடம்பெறும் வீதி  விபத்துகள் தான். 

மனதைப் புரட்டிப்போடும் இந்த மரணச் செய்திகள்  சில வருடங்களாக வரையறையற்றுச் செல்கின்றன.

அண்மையில் நான் அறிந்த விபத்துகளும் பார்த்த மரணக் கதறல்களுமே இவ் விடயத்தினை உங்களோடு பகிர்ந்து கொள்ள வைத்திருக்கிறது. 

வயது வேறுபாடின்றிக் காவு கொள்ளப்படும் இந்த உயிர்த் துறப்பின் அத்திவாரம் நிதானமின்மைதான். அதிலும் இந்த வீதி விபத்துகளால் அதிகமாக இளையோரே காவு கொள்ளப்படுகின்றனர் என்பது துர்ப்பாக்கியமான நிலைமை அல்லவா…

பெற்று வளர்த்து,  பிள்ளைக்கனிகள் நிழல் தரும்  என எண்ணிக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு இன்று பிள்ளைகள் கொடுக்கும் பேரிடியாக இந்தச் சாவுச் செய்திகள்  உள்ளன.

அது மட்டுமா, எத்தனை கல்வியாளர்களை, அறிவு ஜீவிகளை, சமூகச் சிந்தனையாளர்களை,  அறக்கொடையாளரை   விபத்தில் பலி கொடுத்திருக்கிறோம்….

அறிவியல் உலகிற்கு, வாழ்வியல் நிலைமைக்கு, இது எத்தகைய பேரிழப்பு என்பதை யாரும் சிந்திப்பதில்லை.

எண்ணிக்கையற்ற இந்த மரணங்களுக்கு யார்    பொறுப்பு? 
வீதி விதிகளை அனுசரித்துச் செல்பவர்கள் கூட எதிரில் வரும் தான்தோன்றித்தனமானவாகன ஓட்டுநர்களால் மரணவாசலைத் தொட்டு வருவதை சாதாரணமாக விட்டுவிட முடியுமா?

வாழும் வயதில், வாலிப மிடுக்கில்,   இவ்வாறு உயிரினை இழப்பவர்கள் இருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?

அதிகரித்த போதைப் பாவனை, போதியளவான ஓய்வின்மை, வாகனங்கள் மீதான இளையோரின் மோகம், பெருகிவிட்ட  வாகனப்புழக்கம், ‘வேகம் – விவேகமற்றது’ என்பது புரியாத மடத்தனம், இவை எல்லாம் தான்  இன்றைய வீதி விபத்துகளின் அதிகரிப்பிற்கு காரணம்.

தங்களை நிதானப்படுத்த முடியாதவர்கள் அந்த நிலையில் வாகனங்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவேண்டும் என்பது புரியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

ஓடுகின்ற வாகனங்கள் எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவற்றின் கட்டுப்பாட்டில் நாம் இருந்து விடக்கூடாது. 

வாகனங்களின் வேகத்தை உணரமுடியாத வகையில் இன்று  வாகனங்களைக் கையாளுகின்றோம்.

உயிரில்லாவிட்டாலும் உருவம் கொண்ட அவற்றை உறவாகப் பார்த்தோமானால் நிச்சயமாக அவற்றில் ஏற்படும் சிறுகீறல் கூட எமது மனதைப் பாதிக்கும். 

அவை நொருங்கிச் சிதறும் அளவிற்கு  மோதத்துணிய மாட்டோம்.  அதையும் சிதைத்து எம் உயிரையும் இழக்க மாட்டோம்.

வருமான அளவை உயர்த்துவதற்காக , பல சாரதிகள் சரியான அளவில் உறங்காது, பணிக்குச் சென்று விடுகின்றனர். அதனால் வாகனங்களை அவர்களால் சரியாக கையாளமுடிவதில்லை, கடைசியில் பலரின் உயிர் வீணே போக இவர்கள் காரணமாகிவிடுகின்றனர்.
ஒருவருடைய    உயிர்ப்பலியில் மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா?

ஒரு மரண ஓலம் மற்றவர்களின் மனதை உலுக்குவதில்லையா?

தங்களின் உயிரை விட, பரிமளிக்கும் இந்த வாழ்க்கையை விட  அற்பமான விடயங்கள்  பெரிதாகிவிடுகிறதா?

வாழ்க்கையைப் பற்றிய கனவுகள் தான் எத்தனை எத்தனை…
அத்தனையையும் ஒரு நொடியில் அழித்து விடுகிறார்களே…

எதிர்காலம் பற்றிய கனவுகளும்  கற்பனைகளும் கானல் நீராகும் அவலத்தை என்ன சொல்லி ஆற்றிக்கொள்வது?

இளம் குடும்பஸ்தரின் மரணம்,  இருபத்துநான்கு வயது இளைஞனின் மரணம்,  பல்கலைக்கழக மாணவியின் பரிதாபமான மரணம், பட்டயக்கணக்காளரான இளம்பெண்ணின் மரணம்,  விபத்தில் வைத்தியர் மரணம், தாதி ஒருவரின் மரணம் இப்படி அன்றாடம் வரும் செய்திகள் மனங்களை உலுக்கிச் செல்கிறதே…

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நாட்டின் சுமையை நீக்கவேண்டிய நிலையில் ஒவ்வொரு குடிமக்களும் இருக்க ,  இவ்வாறு விபத்தில் பறிபோகும் உயிரிழப்பு என்பது இந்தத் தேசத்திற்கே பாரிய பேரிழப்பாகும்.

குடும்பங்களைத் தாங்க வேண்டிய இளையோரின் மரணம் என்பது அந்தக் குடும்பங்களை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பது விபத்தில் இறந்து விடுபவர்களுக்குத் தெரிவதில்லை.

சென்ற ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 1,387 பாரிய வீதி விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்  3,326 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தரவுத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அண்ணளவாக இதே எண்ணிக்கை அடுத்த ஆறு மாதங்களிலும் கணக்கிட்டால் இழப்புகளின் அளவு என்பது மிகப்பிரமாண்டமான ஒன்றல்லவா,

அழுது தீர்ப்பதால் அடங்கிவிடுமா இப்பெருந்துயரங்கள்.    

உயிரைப் பறிகொடுத்த உறவுகளுக்கு அடுத்தவரின்,  ஆறுதல் என்ற ஒற்றைச் சொல் சமாதானம் தந்து விடுமா?

இழப்போடு வாழ்கின்றவர்களின் கண்ணீர்,  வருங்காலம் பற்றிய  வெறுமை, நீண்டு கிடக்கும் நிராதரவு இவற்றை யாரால் ஈடுசெய்ய முடியும்?

அன்பான உ றவுகளே சிந்தியுங்கள்… இழப்புகள் ஒருபோதும் மகிழ்ச்சி கொடுப்பதில்லை,  அப்படியிருக்க,  உயிரிழப்பு தரும் வலி ஈடுசெய்யக்கூடியதா?

எமக்கு நாமே எதிரியாகும் இந்த அவலத்திலிருந்து விடுபட  நம்மை நாமே நிதானப்படுத்துவோம்…. 
வீதி விபத்துகளைத் தவிர்ப்போம்..
வீட்டுக்கும் நாட்டுக்கும் முன்மாதிரியான பிரஜைகளாகத் திகழ்வோம்.

ஆக்கம் – கோபிகை.

Related Articles

Leave a Reply

Back to top button