வவுனியா – ஓமந்தை வனப்பகுதியில் ஹிகனெல் எனப்படும் இலங்கைக்கே உரித்தான அரியவகை பல்லி வகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விலங்கு டேசியா ஹலியானா என வவுனியா வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயம் அடையாளம் கண்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் காரியாலயத்திற்கு தகவல் அளித்ததையடுத்து, அதிகாரிகள் சென்று விலங்கை பிடித்து மீண்டும் பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டுள்ளனர்.
குறித்த ஹிகனெல் பல்லியில் உடலில் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்திலான 20 கோடுகளை காணக்கூடியதாக உள்ளது. ஹிகனெல் உயிரினம் சராசரியாக 8 சென்றிமீற்றர்கள் வரை வளரக்கூடியது என்று வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
1979 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரண்டு ரூபாய் நாணயத்தாளில் டேசியா ஹலியானா எனப்படும் ஹிகனெல்லின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வரண்ட வலயங்களில் குறித்த உயரினத்தை காணக்கூடியதாக இருப்பதுடன், சிங்கராஜ மழைக்காடுகளிலும் இவ்வகை உயிரினங்கள் வளரக்கூடும் என்று வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை , பொலன்னறுவை, ஹபரன மற்றும் யாழ்ப்பாணம் போன்ற வரட்சியான காலநிலையுடைய பகுதிகளில் இவற்றை காண முடியும் என்பதுடன் 2020 ஆம் ஆண்டு ஓமந்தை பிரதேசத்தில் இவ்வகை உயிரினம் ஒன்றை மக்கள் அவதானித்து, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.