முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கைக்கு விஜயம் செய்த போது, கொழும்பு தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அருகாமையில் வீதியை மறித்து பொது அடக்குமுறையை ஏற்படுத்தியதாக குறித்த நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த முறைப்பாடு குறித்த வழக்கு விசாரணைகள் இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த விமல் வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி திஸாநாயக்க மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இந்த வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகாததுடன், அவர்கள் இருவரும் சுகயீனமுற்றுள்ளதாகவும், அது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர்களது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 12ஆம் திகதி நடத்த உத்தரவிட்ட தலைமை நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் குறிப்பிட்டார்.