அண்மைய நாட்களில் உலக மக்களுக்கு மிகப் பேசுபொருளான சம்பவம் யாதென்றால் இலங்கையின் ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியமை ஆகும். இந்த மாளிகையைப் பற்றிய பேச்சுத்தான் பட்டி தொட்டி எங்கும் பரந்து கிடந்தது. அதன் காட்சிகள் இணையங்களில் படங்களாகவும் காணொளிகளாகவும் வெளிவந்திருந்தன.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பவர்களின் அதிகாரபூர்வ வதிவிடமும், பணியிடமும் இதுவாகும். இலங்கை குடியரசாக மாறும் வரை “அரசர் மாளிகை” அல்லது “இராணி மாளிகை” என்றே இதன் பெயர் இருந்தது. கொழும்பு கோட்டையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இந்த மாளிகை அமைந்துள்ளது.
இது, 218 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் என்றால் நம்ப முடிகிறதா….ஆனால் அதுதான் உண்மை. 1505 இல் போத்துக்கேயரின் வருகையின் போது சாதாரண தங்குமிடமாக மரக்கட்டைகளும் ஆட்டுத் தோலும் கொண்டு வேலி அடைத்து பின்னர் அவ்விடத்தில் சிறியதொரு கோட்டையை நிர்மாணித்தனர். அந்த இடமே இன்று பிரமாண்டமாக காட்சியளிக்கும் ஜனாதிபதி மாளிகை ஆகும்.
100 ஆண்டுகள் வரை போத்துக்கேயர் வசம் இருந்த இவ்விடத்தை 1670இல் ஒல்லாந்தர் கைப்பற்றினர். வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இதன் அரணாக கடல் காணப்பட்டது.
நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்ட பாதுகாப்பனதொரு கோட்டையும் அதனைச் சுற்றி 8 உயர்ந்த காவலரண்களும் எழுந்து நின்றன. அதனுள்ளே அலுவலகம், ஆயுதக்களஞ்சியம், படைத்தளம் என்பவை அடங்கலாக 4 கட்டடங்கள் கட்டப்பட்பட்டன.
1798இல் இந்தக் கோட்டை ஆங்கிலேயர் வசமான போது, முற்றாக அழிக்கப்பட்டது.
1804 இல் ஒல்லாந்தர் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் கடைசி ஒல்லாந்தர் கவர்னராகப் பணியாற்றிய ஜே.ஜி.வன்.ஏஞ்சல் பீக் என்பவரால் இம்மாளிகை கட்டப்பட்டது. இதன் மேற்குத் தோற்றம் கடலை நோக்கியவாறும் கிழக்குத் தோற்றம் மலைகளை நோக்கியவாறும் அமைக்கப்பட்டது.
அத ஜனவரி 17 இல் அங்கெல்பீக் என்பவரின் பேத்தியால் இது விற்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் இது இலங்கை ஆளுநரின் அதிகாரபூர்வ இல்லமாக இருந்து வந்துள்ளது. அவ்வேளை அரசு மாளிகை என அழைக்கப்பட்டாலும் பிரித்தானிய முடி ஆட்சியைப் பின்புலமாகக் கொண்டு “மன்னர் மாளிகை” என்றும் “இராணி மாளிகை” என்றும் கூறப்பட்டது.
1856 வரை கவர்னராகப் பணியாற்றிய சேர் ஜியோ ஆண்டர்சன் மற்றும் சேர் ஹென்றி வார்ட் ஆகியோரின் காலத்தில் இந்த மாளிகை திருத்தி அமைக்கப்பட்டது.
1883 இல் கவர்னராகப் பணியாற்றிய சேர். ஆர்தர் கோர்டன் விக்டோரியா மகாராணியின் பொன் விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு தனது சொந்தச் செலவில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் தோட்டம் அமைத்து பல அரிய வகையான மரங்களை நாட்டி அதிஉயர் அரச குடும்பத்தினர் தங்குவதற்கு ஏற்ற வகையில் நிர்மாணித்து இதற்கு “கோர்டன் கார்டஸ்” எனப் பெயரிட்டார். அத்தோடு வெள்ளைப் பளிங்கு கல்லினால் ஆன மகாராணியாரின் உருவச்சிலையும் வைக்கப்பட்டது.
இதன் வடக்குப் பக்கத்தை ஒட்டி தற்போது புத்த பகவான், பிள்ளையார், விஷ்ணு பகவான் ஆகிய கற் சிலைகள் வைக்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் இலங்கைக்கு வந்தபோது இங்கு தான் தங்கிச் சென்றனர்.
அல்பிரட் விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பேக் கோமகன், மற்றும் அவரது சகோதரர், எலிசபெத் மகாராணி ஆகியோர் இங்கு தங்கிச் சென்றுள்ளனர்.
1972 இல் இலங்கையின் முதலாவது ஜனாதிபதியான வில்லியம் கோபல்லாவ அவர்களின் வாசஸ்தலமாக வழங்கப்பட்டது.
கொழும்பிலிருந்து அனைத்து தூரங்களும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து முறையாக, மைல்களில் அளவிடப்படுகின்றன. 1830 ஆம் ஆண்டில் கொழும்பு _ கண்டி நெடுஞ்சாலையை நிர்மாணித்ததன் மூலம் இத்திட்டம் ஆரம்பமானது. இது இலங்கைத் தீவின் முதல் நவீன நெடுஞ்சாலை ஆகும். அப்போதிருந்து, பெரும்பாலான நெடுஞ்சாலைகள் கொழும்பிலிருந்து உருவாகின்றன.
இந்த மாளிகையை 29 ஆளுநர்களும், வில்லியம் கோபல்லவா, ஜேர். ஆர். ஜெயவர்த்தனே., ஆர். பிரேமதாச, டீ.பி விஜயதுங்க, சந்திரிகா, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ ஆகிய எட்டு ஜனாதிபதிகளும் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தியுள்ளனர். இத்தனை பெருமைகளைக் கொண்ட இந்த மாளிகையை மக்கள் கைப்பற்றிய போது கோட்டபாய மீதான வெறுப்புணர்வில் பல்வேறு குறும்புச் செயல்களையும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர். ஜனதன்