பிரதமர் அலுவலகம் தற்போதும் போராட்டகாரர்களின் கைவசமே உள்ளது. பிரதமர் அலுவலகம் நேற்று போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மக்களின் தன்னெழுச்சியான எதிர்ப்பு போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோட்டபாய நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளார். நேற்று ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த நிலையில் இதுவரை இராஜினாமா செய்யவில்லை.
அதற்குமாறாக பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கோட்டபாய நியமித்து போராடிவரும் மக்களுக்கு கோபத்தை அதிகமாக்கியுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் ரணில் உடனடியாக பதவி விலக வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொலிஸாரின் கண்ணீர புகைக்குண்டுத் தாக்குதல், நீர்த்தாரைகை பிரயோகம், இராணுவம் மற்றும் பொலிஸாரின் தாக்குதல்களையும் தாண்டி பிரதமர் அலுவலகம் போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டுக்குள் நேற்று கொண்டுவரப்பட்டது.
தற்போது நாட்டின் முக்கிய அரசியல் கேந்திர மையங்களான ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லம், அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் என்பன போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.
கோட்டாவும், ரணிலும் பதவி விலகும் வரை தாம் மேற்குறித்த இடங்களில் இருந்து செல்லப்போவதில்லை எனத் தெரிவித்து மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.