கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் 35 கொள்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
இதன்போது, குறித்த காணியிலிருந்து 33 கொள்கலனில் டீசலும், 1 கொள்கலனில் பெற்றோலும், மற்றுமொரு கொள்கலனில் 25 லீட்டர் மதிக்கத்தக்க மண்ணெண்ணையும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன் படி ஏறத்தாழ 6800 லீட்டர் டீசலும், 200 லீட்டர் பெற்றோலும் சட்டத்திற்கு முரணாக உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மீட்கப்பட்டதுடன், வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும், இதன்போது சான்றுப் பொருட்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் டீசல் லீட்டர் ஒன்று 1700 ரூபாவிற்கும், பெற்றோல் வீட்டர் ஒன்று 3000 ரூபாவிற்கும், மண்ணெண்ணை லீட்டர் ஒன்று 1500 ரூபாவிற்கும் கறுப்பு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.