இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கியர்களின் மத தலமான குர்த்வாரா அருகே காலை குறைந்தது இரண்டு குண்டுகள் வெடித்தன.
இந்தக் குண்டுவெடிப்பில் சவீந்தர் சிங் என்ற 60 வயதான சீக்கியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குருத்வாராவில் நடந்த குண்டு வெடிப்பையடுத்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காபூலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில் குருத்வாராவில் 25 – 30 இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் 15 முதல் 20 பயங்கரவாதிகள் காபூலின் கார்ட்-இ-பர்வான் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவிற்குள் நுழைந்து காவலர்களை கட்டிப்போட்டனர்.
மேலும், மார்ச் 2020-இல், காபூலின் ஷார்ட் பஜார் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு ஹர் ராய் சாஹிப் குருத்வாராவில் ஒரு கொடிய தாக்குதல் நடந்தது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
சமீபத்தில் இந்த மாத தொடக்கத்தில் ஜூன் 11 அன்று, காபூலின் பட்காக் சதுக்கத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தத் தாக்குதல் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.