தமிழர்களின் பூர்வீக நிலமான குருந்தூர் மலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புத்தர் சிலை கபோக்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவில் இருந்த இடத்தில் பௌத்த தொல்லியல் எச்சங்கள் உள்ளதாக கூறப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தின் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு பழமையான வடிவில் விகாரை அமைக்கப்பட்டுளளதுடன் அதனைச் சுற்றியுள்ள 400 ஏக்கர் நிலத்தினையும் விகாரைக்குச் சொந்நதமான இடமாக அறிவிக்கவேண்டும் எனவும் அரசாங்கத்திடம் அந்த விகாரைக்குப் பொறுப்பான புத்த பிக்குவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அங்கு தமிழ் மக்களும் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதிக்குச் செல்ல தமிழர்கள் அனுமதிக்கப்படுவதுமில்லை.
இந்த நிலையில் இராணுவ ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட விகாரைப்பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. புத்தர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் உதவியுடன் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகளும் பௌத்த பிக்குகளும் பெருமளவாள பௌத்த மக்களும் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இருப்பினும் இந்த விகாரை அமைப்பது நீதிமன்ற கட்டளைகளுக்கு புறம்பானது, இடைக்கால உத்தரவு வெழங்கப்படவேண்டும் என எம். ஏ சுமந்திரன் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும் இதுவரை தடை உத்தரவோ வேறு கட்டளைகளோ பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.