முதலாவது தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதலாவது செய்திப் பத்திரிகையும் ஆக விளங்கியது உதயதாரகை. இது அமெரிக்க இலங்கை மிசன் மூலம் வெளியிடப்பட்டது. இதனுடைய முதலாவது இதழ் 1841 சனவரி 7 இல் வெளிவந்தது. தமிழில் உதயதாரகை என்றும் ஆங்கிலத்தில் Morning Star என்றும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிடப்பட்டது. இலங்கையரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை என்ற பெயரும் உதயதாரகைக்கே உரியது.
உதயதாரகை முதல் இதழின் ஆசிரியத் தலையங்கத்தில், “…….உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.