யாழ். – கொடிகாமம் வடக்கு பகுதியில் கள்ளுத் தவறணை நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப்பகுதி மக்களால்ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் நிரந்தர கட்டடம் அமைப்பதற்கும், தவறணையை அகற்றுமாறும் கூறி இன்று மக்கள் உரிமையாளருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது குழப்ப நிலை ஏற்பட்டதனால் கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசி அவர்களின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்தனர்.
மக்களின் வாக்கு மூலத்திற்கு அமைய நாளைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் எனவும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும். அது வரை கட்டட நடவடிக்கைக்கு தற்காலிகமாக நிறுத்துமாறும் பொலிஸ் பொறுப்பதிகாரி எதிர்வீரசிங்க அறிவித்துள்ளதையடுத்து, மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறினர்.
குறித்த கள்ளுத் தவறணையானது ஐந்து வருடங்களுக்கு தற்காலிகமாக இயங்குமெனத் தெரிவித்து ஆரம்பித்தையடுத்து, அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கும் முகமாக நிரந்தர கட்டடம் ஆரம்பிக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.