(நமது விசேட செய்தியாளர்)
மொட்டுடன் ஆட்சி அமைத்துக் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாது எனவும், அவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு மக்கள் கோரவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்களால் பாதிக்கப்பட்டோர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்ற இம் மாநாட்டில் அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-
“காலிமுகத்திடல் மாத்திமின்றி நாட்டின் எந்த இடத்திலும் இந்த அடாவடித்தனமான அரசை முதலில் வீட்டுக்கு அனுப்புமாறே மக்கள் கோருகின்றனர். அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படும்.
மக்களின் குரல் மற்றும் மக்களின் கோரிக்கைகளுக்கு அப்பால் நாம் எதனையும் செய்யப்போவதில்லை.
தற்போதைய ஜனாதிபதியையோ அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த யாருடனும் இணைந்து ஆட்சியமைக்குமாறு மக்கள் கோரவில்லை.
மொட்டுடன் ஆட்சி அமைத்துக் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாது. அவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு மக்கள் கோரவில்லை.
அன்று நாம் நாட்டை ஒப்படைக்கும்போது, 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கையிருப்பு இருந்தது. இன்று அரசு உலகம் பூராகவும் பிச்சை எடுக்கின்றது” – என்றார்.