கட்டுரைசெய்திகள்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்!”

silanka

எழுத்து ஞானதாஸ் காசிநாதர்

இந்த நாட்டிலே ஏதோ தமிழர்கள்தான் இனவாதிகள் என்ற மாதிரியான ஒரு கருத்தியல் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தனிநாடு கேட்டவர்கள் தமிழர்கள்தான், அதனால் “அவர்கள்தான் இனவாதிகள் மற்றவர்கள் எல்லாரும் இன, மத பேதமின்றி வாழ விரும்பும் ஜனநாயகவாதிகள்.
இந்த தமிழர்கள் இன்னும் இனத் துவேசத்தோடு நடந்து கொள்கிறார்கள்” என்ற மாதிரியான பல பதிவுகளை (தமிழர்களின்) நான் அடிக்கடி பார்க்கிறேன்.
தமிழரின் அடிப்படைக் கோட்பாடே:
“யாதும் ஊரே யாவரும் கேளிர்!”
இதை விட வேறொரு கோட்பாடோ, புனித நூலோ தமிழர்களிடம் இல்லை. ஐம்பெரும் காப்பியங்களையும், அகநானூறு புறநானூறு போன்ற வாழ்வியல் வழிகாட்டிகளையும், திருக்குறள் என்னும் உலகப்பொதுமை தத்துவத்தையும் படைத்த எம் மூதாதையர் ஒருபோதும்,
“இது உன் தேசம், இது இறைவனால் உனக்கு வழங்கப்பட்ட பூமி. இதை ஆள வேண்டியதும் காக்க வேண்டியதும் உன் கடமை. ஏனைய இனங்களை அடக்க வேண்டியதும் உன் பொறுப்பு”
என எந்த நாட்டையும், தேசத்தையும் ஊரையும், எங்களுக்குக் காட்டவில்லை.
அத்தகைய போதனைகளையோ புனிநூல்களையோ எமக்கு அவர்கள் கையளிக்கவுமில்லை.
சொன்னதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்!”
தனிநாடு என்பது தமிழரின் “இனவெறியில்” இருந்து பிறந்தது அல்ல.
அது இலங்கை தீவின் அனைத்து இனங்களினதும் விமோசனத்துக்கும், விடுதலைக்குமான விஞ்ஞானபூர்வமான யதார்த்தமான பொறிமுறையாக எழுந்த ஒரு கோட்பாடு.
சற்றுச் சிந்தியுங்கள்,
சிங்களமும் தமிழும் தனித் தனி தேசங்களாக இருந்திருந்தால், நாட்டைக் கட்டியெழுப்ப எந்த ஒழுங்கான திட்டமும் இல்லாத வெறும் இனவாதத்தை வைத்தே வடைசுடும், கொள்ளையடிக்கும் ராஜபக்‌ஷக்கள் போன்ற கும்பல்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?
1948 இல் இலங்கை, இந்தியா, சிங்கபூர் போன்ற நாடுகள் காலனித்துவதுவ ஆட்சியாளர்களிடமிருந்து விடுபட்ட போது, சிங்கபூர் தலைவர்களின் கனவாக இருந்தது என்ன தெரியுமா?
“சிலோன் போன்ற சொர்க்க பூமியாக சிங்கபூரை மாற்ற வேண்டும்!”
அத்தகைய அனைத்து வளமும் கொண்ட ஒரு அழகிய, ஒப்பீட்டள்வில் பணக்கார நாடாக இலங்கை இருந்தது.
ஆனால், 1978 இல் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் அன்றைய சிங்கபூர் ஜனாதிபதியைச் சந்திக்கும் போது சொன்ன வார்த்தை,
“நான் இலங்கையைச் சிங்கபூர் போல ஆக்கப் போகிறேன்”
30 ஆண்டுக்குள் சிங்கபூர் சொர்க்க பூமியாகிவிட்டது. இலங்கை கெட்ட பூமி ஆகியது. ஏன்?
சிங்களப் பேரினவாதம் தான் க◌ாரணம்!!
அப்போது சிங்கபூர் ஜனாதிபதி ஜே.ஆரிடம் சொன்ன வார்த்தை,
“நல்லது. அதற்கு முன்னர் உங்கள் நாட்டின் இனப்பிரச்சினையை நல்லவிதமாகத் தீருங்கள். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும்!”
ஆனால், ஜே.ஆர் அதை நல்லவிதமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக கெட்டவிதமாகவும், தந்திரமாகவும் தீர்க்க முற்பட்டார்.
அதன் விளைவை இலங்கை இன்று ஆட்டம் காண்கிறது.
இனப்பிரச்சினையை கெட்டவிதமாகவும் தந்திரமாகவும் தீர்த்துவிடலாம் என்ற சிங்களத்தின் “மோடைப் புத்திதான்” ராஜபக்‌ஷக்களின் எழுச்சி!
இன்று ராஜபக்ஷகளை எதிர்த்தாலும் இனப்பிரச்சினையை கெட்டவிதமாகவும் தந்திரமாகவும் தீர்த்துவிடலாம் என்ற சிங்களத்தின் “தந்திரப்புத்தி” இன்னும் மாறவில்லை என்பதுதான் யதார்த்தம்.
ஆனால் எமது கோட்பாடும் தத்தவமும் கொள்கையும் எப்பவும் ஒன்றே,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்!”

Related Articles

Leave a Reply

Back to top button