இலங்கைகட்டுரைசெய்திகள்

நீங்களும் திருடர் தானா? அறிய பொறுமையாக வாசியுங்கள் ……!!

Thief

இலங்கையிலும் உலகத்திலும் இன்றைய பொருளாதார நெருக்கடியே தற்போது பேசு பொருள் ,இதற்கு யார் வகை கூறுவது என்பதே இப்போது கேள்வி .நீங்களும் இதற்கு வகை கூற வேண்டிய திருடரா?என அறிய முதலில் இதை ஆறுதலாக படித்துப் பாருங்கள்.

நாங்கள் விடும் தவறுகளை நாங்களே இனம்கண்டு திருத்திக்கொண்டால் நாடும் தானே திருந்திவிடும் என நாம் நம்புகிறோம் . மாற்றம் நமக்குள்ளும் உருவாக வேண்டும் . “கோட்டா கோ ஹோம்” என கோசம் எழுப்பும் அதிகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது நாட்டின் இந்த நிலைக்கு காரணம் கோட்டாவும் மகிந்தவும் தான் என்று.
என்றாலும் அவர்களோடு சேர்ந்து இதற்கு வகைகூறவேண்டிய இன்னும் சிலதரத்தவரும் இருக்கின்றனர்.
அவர்கள் …..?
இவ்வளவு காலமும் தமது வயிற்றுப்பசியை மாத்திரம் கருத்தில் கொண்டு தேர்தல் காலங்களில் கிடைக்கும் சாராய போத்தலுக்கும் உணவுப்பொதிக்கும் ஏமாந்து அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்கிய வாக்காளர்கள், பொதுமக்களது வரிப்பணத்தால் சும்மா சம்பளம் எடுத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டும் பொறுப்புணர்வின்றி மக்களை அலைக்கழிக்கும் அரச ஊழியர்கள், ப்ராடோ, டிபென்டர்களுக்கு ஒரு சட்டமும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சட்டமும் அமுல்படுத்தும் பொலிசார் , அரச வாகனத்தை, அதன் சாரதியை, தனது மனைவிக்கு சொப்பிங் செல்ல பயன்படுத்தும் ஆயுதப்படை வீரர்கள், பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு வழங்க தரும் கடதாசிகளை அவர்களுக்கு கொடுக்காமல் கட்டு கட்டாக தனது வீட்டுக்கு கடத்து பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகள், தொழில், பதவியைப் பெற தனது கடமையை பட்டத்தை புறந்தள்ளிவிட்டு கேவலம் கெட்ட அரசியல்வாதிகளிடம் மண்டியிடும் இளைஞர்கள், சாதாரண பொதுமக்களின் வரிப்பணத்தைச் சுரண்டி விமானத்தில் முதல் வகுப்பில் செல்லும் அரசியல்வாதியின் முன் நெளிந்து குழைந்தும் மத்திய கிழக்கில் வியர்வை சிந்தி நாட்டுக்கு பெருமளவு அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும், அதே விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணிக்கும் உழைப்பாளிகளோடு எரிந்து விழும் விமானப் பணியாளர்கள், தமக்கு போதிய வருமானம் இருந்தும் களவில் சமுர்த்தி எடுக்கவும் கிராம சேவகரைப் பயன்படுத்தி கள்ளச்சான்றிதழ் பெற்று தன் பிள்ளைக்கு ஸ்கொலர்சிப், மகாபொல எடுக்கும் பெற்றோர்கள்,
ஒவ்வொரு வீட்டிலும் சூரிய சக்தியைப் பயன்படுத்தினால் மின்சார பிரச்சினை தீரும் எனத்தெரிந்திருந்தும் தமது வயிற்றை வளர்ப்பதற்காக அத்திட்டத்தை மண்ணாக்கும் மின்சாரசபை எஞ்சினியர்கள், மிளகாய் தூளில் செங்கல்லையும் மஞ்சள் தூளில் மாவையும் மிளகு விதையோடு பப்பாளி விதையையும் கலந்தும் பழங்களுக்கு காபைட் அடித்தும் பலாக்காயை காப்பிக் கொண்டு குளிப்பாட்டி, அப்பாவி விவசாயியிடம் இரண்டு துட்டுக்கு எடுக்கும் அரிசி, மரக்கறி, பழங்களை நெருப்பு விலைக்கு விற்று பகற்கொள்ளை அடிக்கும் கள்ள நிறுவை செய்யும் வியாபாரிகள் ,
சீருடையில் நெஞ்சுக்கு மேல் இடது பக்கத்தில் அரச இலச்சினை பொருந்திய போதும் தேசிய வனாந்தரங்களில் மரங்களை வெட்டி மொரட்டுவைக்கு களவில் அனுப்புகிற வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் ,
குறைந்த விலையில் உள்ள மருந்தை நோயாளிக்கு சிபாரிசு செய்யாமல் மருந்து கம்பனிகளின் கமிஷனுக்காக தனியார் மருத்துவ மனைகளில் தேவையற்ற பரிசோதனைகளுக்காக அனாவசிய செலவை ஏற்படுத்தும் வைத்தியர்கள் ,
குப்பை கூழங்களை ஏற்றிச் செல்ல வரும்போது கையில் கொஞ்சம் துட்டை திணிக்காவிட்டால் அடுத்த முறை ஏற்றாமல் விட்டுவிட்டுச் செல்லும் நகரசபை ஊழியர்கள்,
வீடுகளில் மூழ்கிக்கிடந்து அரசியல்வாதிகளை தூற்றிக்கொண்டிருக்காமல் குறைந்தது ஒரு மிளகாய் கன்றையாவது நடத்திராணியற்ற முதியவர்கள், பெண்கள், பிள்ளைகள்,
இவர்கள் மட்டுமா……
அறையிலிருந்து வெளியேறும் போது மின்விசிறியை அணைக்காத , ஒழுங்காக தண்ணீர் பைப்பை மூடாத , கையிலிருக்கும் ரொபி பேப்பரை நிலத்தில் கண்டபடி போடுகின்ற, உட்காரும் கதிரைக்கு கீழே சுவிங்கத்தை ஒட்டுகின்ற , கண்ட கண்ட இடங்களில் எச்சில் உமிழ்கின்ற , தனது குழந்தையின் பம்பர்சை நீர் நிலைகளிலும் பாதைகளிலும் எறிகின்ற , மனிதருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற வகையில் வீதிச்சட்டங்களையும் மீறுகின்ற, பஸ் – புகைவண்டி சனநெரிசலில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கின்ற , அடுத்த பிள்ளையின் இடத்தைப் பறித்து தனது பிள்ளையை வரிசையில் முன்நிறுத்துகின்ற, மின்சார மீட்டரில் வயரை மாற்றி, பாவித்த மின்சாரத்தைவிட குறைந்த கட்டணத்தில் களவில் பணத்தைச் செலுத்துகின்ற , வீட்டின் அழுக்கு தண்ணீரை பாதைக்கு திருப்பிவிடுகின்ற , பொலித்தீன், பிளாஸ்ரிக் என்பவற்றை தீவைத்து எரித்து சூழலை மாசுபடுத்துகின்ற , இன்னும் இவ்வாறான அசிங்கமான செயல்களை ஒவ்வொருநாளும் செய்கின்ற நீங்களும் கோட்டாவோடு சேர்ந்து “கோ ஹோம்”

நீங்கள் சின்ன திருடர்கள், அவர்கள் பெரும் கொள்ளைக்காரர்கள் என நினைக்கவேண்டாம். மொத்தத்தில் நீங்கள் எல்லோரும் திருடர்களே. இந்த பதிவைப் படித்த போது நாமும் ஏதோ ஒரு வகையில் திருடராகவே உணரத் தோன்றியது.
அனேகமாக இதனைப் படிக்கின்ற அனைவரும் இதையே உணர்வார்கள் என நம்புகிறோம். திருந்த முயற்சிப்போம் என்ற நம்பிக்கையுடன அடுத்த
விடியலை எதிரகொள்வோம்.

Related Articles

Leave a Reply

Back to top button