அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளூர் நேரம் காலை 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரால் பலர் சுடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 5 பேர் பலியானதாகவும், குறைந்தது 13 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நியூயார்க் நகர காவல்துறை, “புரூக்ளினில் உள்ள 36-வது சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் பலர் சுடப்பட்டுள்ளனர்.
ஆனால், யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மேலும், இந்த தாக்குதல் தொடர்பாகத் தகவல்கள் ஏதும் கிடைத்தால் நியூயார்க் நகர் காவல்துறைக்குத் தெரிவிக்கவும். மேலும் தற்போது யாரும் அந்த பகுதிக்குச் செல்ல வேண்டாம்” என அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஒரு ட்விட்டர் பயனர் மக்கள் சுடப்பட்ட சுரங்கப்பாதையின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், கட்டுமான தொழிலாளி போன்ற உடையில், எரிவாயு முகமுடி அணிந்த ஒருவர் ஏதோ ஒன்றைத் தூக்கி எறிகிறார். அதிலிருந்து புகை வெளிப்படுகிறது.
இந்த வீடியோவை பார்த்த பல ட்விட்டர் பயனர்கள் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். ஆனால், இது பயங்கரவாத தாக்குதல்தானா இல்லையா என்பதை காவல்துறை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.