“நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என ஒளவையார் நாலடியார் எனும் நூலில் பாடுகிறார்.
குளத்தினுள் வளரும் அல்லி மலரின் வளர்ச்சியின் அளவானது நீரின் அளவைப் பொறுத்தே அமைகிறது. அடியிலுள்ள நீர்மட்டம் உயர உயர மலரின் உயரமும் உயரும்.
ஆம்பல் { அல்லி மலர்} உயருவதற்கு நீர் மட்டுமே காரணம்.
ஒருவருடைய நுண்ணறிவும் வளர்வதும் அப்படித்தான்….அவரவர் கற்ற நூல்களைப் பொறுத்தே அறிவுத்திறன் அமையும்.
நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க அறிவு பெருகும். மதிப்பு கூடும்….
என்பதே இச்செய்யுள் வரிகளின் பொருள்.
அவரது இந்த ஆழ்ந்த வரிகள் அறிவுத்தேடலின் முக்கியத்துவத்தை, ஞான சிரத்தையின் அவசியத்தை எமக்கு உணர்த்துகின்றது. அறிவைத் தேடவேண்டுமெனில் நாம் அதிகமாக வாசிப்பு பழக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
“வாசி…வாசிக்கப்படுவாய்” என்றொரு வாசகம் உண்டு. வாசிப்பு என்பது மனிதனைப் பூரணப்படுத்துகின்றது என்பதோடு மனிதனைப் புடம் போடுகிறது. விலங்கினங்களில் ஆறாம் அறிவைக் கொண்டவன் மனிதன். பகுத்தறியும் பாங்கே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்றது.
வாசிப்பதென்பது வெறுமனே எமக்கு அறிவினை மட்டும் தருவதில்லை. சிந்தனை ஆற்றல், மன அமைதி, ஞாபகசக்தி, கற்பனைத்திறன், படைப்பாற்றல், பொறுமை, முடிவெடுக்கும் திறன், ஆராய்தறியும் தெளிவு எனப் பலவற்றைத் தருகின்றது. எமக்கு முன்னர் வாழ்ந்த, நாம் வழிகாட்டியாகப் பார்க்கும் அறிஞர்களும் கண்டுபிடிப்பாளர்களும் தத்துவமேதைகளும் புத்தகங்களில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் தான். அந்தப் புத்தகங்கள் கொடுத்த அறிவையும் ஞானத்தையுமே எமக்காக வார்த்து வடித்து தந்துள்ளனர்.
“டால்ஸ்ராய்” யின் புத்தகங்கள் தான் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது என்கிறார் மகாத்மாகாந்தியடிகள்.
மகாத்மாகாந்தியனுடைய சத்தியசோதனை புத்தகம் தான் “மார்ட்டின் லூதர் கிங்” என்ற மகானை உருவாக்கியது.
“எட்டானல் வெலோசிற்றி” எனும் நூல் தான் “டொக்ரர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்” என்ற அணு விஞ்ஞானியைச் செதுக்கியது என அறிகின்றோம்.
வாசிப்பு மனிதனது வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் சிறந்த உதாரணங்களாகும்.
“தாள்களில் மெழுகப்பட்ட எழுத்துக்கள் கண்களின் மேய்ச்சல் நிலம் மட்டுல்ல, சிந்தனையைச் செதுக்கும் சிற்பி, சாத்தானையும் தேவதையாய் வடிவமைக்கும் உயர்ந்த வரம்”
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட, பள்ளி மாணவர்கள் தூங்கச் செல்லும் முன்னர் குறிப்பிட்ட நேரம் வாசிக்கவேண்டும் என்பதும் பெற்றோரும் அந்த விதிமுறையை பிள்ளைகள் கடைப்பிடிக்க உதவ வேண்டும் என்பதும் பள்ளிகளின் கட்டாயமாகும்.
அல்பட் ஐன்ஸீனிடம் “மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது?” எனக்கேட்டபோது சற்று நேரம் கூட யோசிக்காமல் “புத்தகம்” எனப் பதிலளித்தாராம். புத்தகங்கள் வாழ்க்கையைக் கற்றுத் தருகின்றது என்றால் அது மிகையாகாது.
உலகத்தின் எந்தவொரு இடத்தைப் பற்றியோ அல்லது எந்தவொரு விடயத்தைப் பற்றியோ நாம் அறியவேண்டுமென்றால் ஏனைய வழிகளை விட வாசித்து அறிந்துகொள்வதென்பது மூளையில் மிகச்சுலபமாகப் பதிந்து விடுகின்றது. வாசிக்கும் போதுதான் அந்த எழுத்துகளோடு நம்மால் இயல்பாகப் பயணிக்கமுடியும். “ஒரு வாள் செய்யமுடியாத வேலையை ஒரு நூல் செய்துவிடும்” என்பது மெய்யான வரிகளே.
வாசிப்பதற்கும் தகவல்களை அறிவதற்கும், முன்பு பத்திரிகைகளும் புத்தகங்களும் நூல் வடிவில் எமக்கு கிடைத்தன. தற்போதைய காலத்தில் அதைவிடச் சுலபமாக இலத்திரனியல் பத்திரிகைகளாகவும் இலத்திரனியல் புத்தகங்களாகவும் எமது கரம் கிட்டுகின்றன. இருப்பினும் வாசிப்பதிலான ஆர்வம் இன்று அருகிவிட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.
பாடசாலைப் புத்தகங்களை மட்டும் வாசிப்பதால் யாரும் முழுமையடைந்துவிட முடியாது. தேடித்தேடி பல இலக்கியங்களையும் அன்றாடச் செய்திகளையும் அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொள்வதன் மூலமே உலகத்தின் மூலை முடுக்குகளில் நடைபெறும் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.
பொது அறிவையும் நுண்ணறிவையும் பத்திரிகைகளை வாசிப்பதன் மூலமே எம்மால் அறிந்துகொள்ள முடியும். தற்போது போட்டிப் பரீட்சைகளிலும் வேலைக்கான நேர்முகப் பரீட்சைகளிலும் பொது அறிவு, நுண்ணறிவு இரண்டுமே எமக்கு மிக அவசியமாகிறது. ஒரு பத்திரிகையின் உருவாக்கம் என்பது சாதாரண விடயம் அல்ல, பலபேரின் ஆத்மார்த்தமான உழைப்பும் முயற்சியும் திறமையும் இணைந்ததே பத்திரிகை.
நாளிதழ்களை நம் நாட்டுச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுத் தொடர்பான செய்திகள், கலை இலக்கியக் கட்டுரைகள், ஜோதிடம், பொது அறிவு, சினிமா தகவல்கள், புதுமையான தகவல்கள், விசேட அறிவிப்புகள், வேலைவாய்ப்பு தகவல்கள், தகவல்தொழிநுட்ப விடயங்கள் என அத்தனையையும் ஒன்றாக உள்ளடக்கியே வெளியிடுகின்றனர். நாம் அறியவேண்டிய விடயங்களை அறியாமல் விட்டுவிடுவதும் தெரிந்தே நாம் அறிவுத் தேடலுக்கு இழைக்கும் அநீதி தான். காலம் எமது பெயரை உச்சரிக்கவேண்டும் என்றால் அன்றாட தகவல் அறிதல் மிக இன்றியமையாத ஒன்றாகும். வாசிப்பு என்பது பொழுதுபோக்கு அல்ல. அது வாழ்க்கை. தாகம், பசி, தூக்கம், சுவாசம் இவற்றைப்போல வாசிப்பும் அத்தியாவசியமான ஒன்றாக அமைந்தால் இந்த உலகம் ஏதோ ஒன்றிற்காக உங்கள் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கும்.
வாசிப்பு ஞானம் அற்றவர்கள் வாழ்க்கையின் இரசனையை உணரமுடியாதவர்களே, அதாவது கால் போன போக்கில் வாழ்ந்து விடுவார்கள். வாழ்க்கையை அழகியலாய் வாழத்தெரியாதவர்களை அது அழைத்துச் செல்வதே இல்லை. …..தள்ளி வைத்துவிட்டு தன்பாட்டில் சென்றுவிடும். இன்று கண்வழிக்காட்சிகளையே அதிகம் விரும்புகிறார்கள். பார்க்கும் காட்சிகளின் மூலம் பாத்திரங்கள் ஒரே தோற்றத்தில் தான் காண்கின்றோம். ஆனால் வாசிப்பதன் மூலம் ஒவ்வொருக்கும் வேறுபட்ட தோற்றங்களில் பாத்திரங்கள் காட்சிப்படும். கற்பனைத்திறன் விரிவடையும்…உயிர்த்துடிப்புடன் செயலாற்றும்.
ஆகையால் வாசிப்பை நேசிப்போம்….அன்றாடம் வாசிப்பிற்கு நேரம் ஒதுக்குவதன் மூலம் வாழ்வின் இரசனைகளை அறிந்து உணர்ந்து சான்றோராயும் வல்லவர்களாயும் வடிவம் பெறுவோம். கட்டுரை ஆக்கம் – இ. ஜனதன் { ஆசிரியர், யாழ். மத்திய கல்லூரி}