இலங்கைசெய்திகள்

2வது ஆண்டு நினைவும் சமூகப்பணிகளும்!!

sympathy

யாழ்ப்பாணம் குடத்தனையில் இடம்பெற்ற அமரர்.மேரிறெஜினா(அன்னக்கிளி) அவர்களின் 02ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும், சமூகப்பணிகளும் 03.04.2020 அன்று இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கு, குடத்தனை, பொற்பதியைச் சேர்ந்த அமரர்.அரியதாஸ் மேரிறெஜினா(அன்னக்கிளி) அவர்களின்
இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் அவரது குடும்பத்தினர், குறிப்பாக நியூசிலாந்து வாழ் தமிழுறவும், அமரர்.மேரிறெஜினா(அன்னக்கிளி)அவர்களின் புதல்வனுமான செல்வதாஸ் அவர்களின் ஒழுங்கமைப்பில் நினைவு நிகழ்வுடன் அறப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

‘அன்னமிடுவோம் அறிவிடுவோம்’ எனும் பொருளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து தனிப்பேருந்து ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு உறவுகள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக அமரர்.மேரிறெஜினா(அன்னக்கிளி) அவர்களின் இல்லத்திலிருந்து இன்னிய அணிவகுப்பு நகர, திருவுருவப்படத்துடன் தேவாலயம் வரை நினைவுநடை இடம்பெற்றது. இறை வழிபாட்டினைத் தொடர்ந்து, இல்லத்து வளவில் தொடர்நிகழ்வுகள் இடம்பெற்றன.

பொதுச்சுடர் ஏற்றல், அகவணக்கம் என்பவற்றினைத் தொடர்ந்து, அன்னாரின் உருவச்சிலை திரைநீக்கம் செய்யப்பட்டு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன. அன்னாரின் கணவர் அரியதாஸ், பிள்ளைகள் செல்வதாஸ், இதயதாஸ் மற்றும் அன்னாரின் சகோதரர்களும் மாலை அணிவித்தனர்.
கவிஞர் யாத்ரீகன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நினைவுரை வழங்கினார்.

அன்றைய சமூகப்பணிகளின் பயன் குறித்து யோ.புரட்சி உரையாற்றினார். முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரவியராஜா அமரர்.மேரிறெஜினா(அன்னக்கிளி) அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்தார்.

நிகழ்வில் 125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 36 மாணவர்களுக்கு பணப்பரிசில்களும் அளிக்கப்பட்டன. நன்றியுரையினை அருட்பணி.செல்வரட்ணம் அடிகளார் வழங்கினார்.
மதிய உணவோடு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறுவர்கள், முதியோர்கள் உள்ளடங்கலாக அநேகர் கலந்துகொண்ட இந்நிகழ்வானது கலந்துகொண்டு பயன்பெற்றோர்க்கு ஆறுதல் அளித்த நிகழ்வாகும்.

இம்முன்மாதியான செயற்பாட்டினை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். ஐவின்ஸ் இணையதளம் சார்பில் நாங்களும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

நன்றி – யோ. புரட்சி.

Related Articles

Leave a Reply

Back to top button