அரசாங்கம் தீர்வினை தராது சர்வதேசமே தலையிட வேண்டும் என வவுனியாவில் ஐந்து வருடங்களை கடந்து தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேலும் தெரிவிக்கும் போது,
எமக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் நேரடியாக வந்து இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.
இன்று எமது போராட்டத்தை வெளிநாடுகள் உன்னிப்பாக அவதானித்து கொண்டு இருக்கின்றனர். நாங்கள் வெளிநாட்டின் தலையீட்டினையே நம்பி இங்கிருந்து போராடி வருகின்றோம்.
வவுனியாவில் கடந்த 1847ஆவது நாட்களாக வீதியிலிருந்து போராடி வருகின்றோம். தற்போது இடம்பெற்றுவரும் ஐநா சபை மாநாட்டில் எங்களுக்கு தீர்வு கிடைக்கும், எங்களுடைய பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். எத்தனை வருடங்கள் கடந்தாலும் தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் – கிஷோரன்