வங்கி கணக்குகளில் இருந்து நூதனமான முறையில் 12.93 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்டிருக்கும் புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை கணபதி நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் செல்போனுக்கு கடந்த 4ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அவரது வங்கி கணக்கை முடக்கப்படும் நிலையில் உள்ளதாகவும், உடனடியாக அதை சரி செய்ய, அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுமாறு கூறப்பட்டதாம். அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் வங்கி கணக்கு, பான் கார்டு மற்றும் ஓடிபி விவரங்களை பதிவு செய்ததாகவும் இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 10 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
அதேபோல் செல்வபுரம் முத்துஸ்வாமி காலனியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் வங்கி கணக்கில் ரூபாய் 2 லட்சத்து 39 ஆயிரத்து லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை நூதன முறையில் மோசடி செய்யப்பட்டதாகவும், காளப்பட்டி திருமுருகன் நகரைச் சேர்ந்த துரை முருகன் என்பவரது செல்போனுக்கும் அதேபோன்று குறுந்தகவல்கள் வந்ததால் சுமார் 60 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக்கணக்கில் இருந்து மோசடியாக எடுக்கப்பட்டதாகவும் மூவரும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர் .
ஒரே நாளில் 3 பேரிடம் சேர்த்து மொத்தம் ரூபாய் 12. 93 லட்சம் நூதன முறையில் மோசடி நடந்ததை அடுத்து இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வங்கியில் இருந்து ஒருபோதும் வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றை கேட்க மாட்டார்கள் என்றும் இது குறித்த விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற போலியான குறுந்தகவல்கள் வந்தால் அவற்றை உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் என்றும் ஏற்கனவே வங்கி அதிகாரிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.