தமிழ் திரையுலகின் சகோதர நடிகர்களாகிய சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் முன்னணி நடிகர்களாக இருக்கும் நிலையில் நடிகராக மட்டுமின்றி சூர்யா ஒரு பக்கம் அகரம் பவுண்டேசன் என்ற இயக்கத்தை நடத்தி ஏழை குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி உழவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் உழவன் பவுண்டேஷன் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அப்போது சூர்யா கேட்ட ஒரு கேள்விக்கு கார்த்தி சுவாரசியமாக பதில் அளித்தார். எப்படி விவசாயிகளை தேர்வு செய்து பரிசு வழங்குகிறாய்? விவசாயம் பற்றி உனக்கு எப்படி தெரிந்தது? என்று கேட்ட கேள்விக்கு கார்த்தி கூறிய பதில் பின்வருமாறு:
அண்ணனின் அகரம் ஃபவுண்டேஷன் எப்படி கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களை வளர்த்தெடுக்கிறது என்பதைப் பார்த்து ஈர்க்கப்பட்டேன். அப்போது விவசாயம் தான் நினைவுக்கு வந்தது. விவசாயம் சார்ந்த என்ஜிஓக்கள் என்ன செய்யத் தவறுகிறது என்பதை அறிந்தோம். அதற்காக நிறைய ஆய்வு செய்தோம். அப்போது தான் விவசாயம் எவ்வளவு வித்தியாசமானது, எவ்வளவு உன்னதமானது என்பதை அறிந்து கொண்டேன். ஒரு மண்ணில் விளைவது இன்னொரு மண்ணில் விளைவதில்லை. இந்த காலம் ஃபாஸ்ட் காலம். எல்லாத்துக்கும் உடனடியாக தீர்வு தேடும் காலம். ஆனால் ஒரு விவசாயி விதை விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, களையெடுத்து பின்னர் அறுவடை செய்கிறார். எத்தனை பொறுமையான வேலை. அந்த உன்னதமான விவசாயிகளை கவுரவிக்கவே இந்த மேடை உள்ளது என்று கூறினார்.