எழுத்துமூல அறிக்கையை முன்வைத்தார் மிச்சல் பெச்சலட் அம்மையார்!!
Michelle Bachelet
இலங்கை தொடர்பான தமது எழுத்துமூல அறிக்கையை நேற்றைய தினம், மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் முன்வைத்தார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட் அம்மையார் அவர்கள்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலைமாறுகால நீதிக்கான நம்பகரமான காலவரைவு திட்டத்தை முன்வைக்க இலங்கை இதுவரையில் தவறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுதல் மற்றும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பன தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் அண்மைகால போக்குகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள முதற்கட்ட நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டியுள்ளார்.
அதேநேரம், பயங்கரவாத தடைச் சட்டம் ஊடாக ஏற்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல் மற்றும் மீள் நிகழாமை என்பனவற்றைத் தடுப்பதற்காக, சட்ட நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத்துறையில், ஆழமான சீர்திருத்தங்கள் அவசியமாகும்.
கடந்த ஆண்டில், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்றும், பொறுப்புக்கூறல் செயன்முறையில் தடைகள் நிலவுவதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவது தாமதமாகின்றது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கைக்கு பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், உறுதிப்படுத்த முடியாத பல குற்றச்சாட்டுக்கள் இந்த அறிக்கையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை தொடர்பில், இலங்கையும் ஏனைய உறுப்பு நாடுகளும் எதிர்ப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் அடங்கிய இந்த அறிக்கையுடன் இணங்க முடியாது என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்