வவுனியா ஓமந்தையில் கலாசார மத்திய நிலையத்தினை நேற்று (03) திறந்து வைப்பதற்காக வந்த அமைச்சர் விதுர விக்ரமநாயக கலைஞர்களை முன்னிலைப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
குறித்த நிலையத்தினை அமைச்சர் திறந்து வைப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்னிய வாத்தியங்களுடன் அமைச்சரை அழைத்து வர ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் அதனை மாற்றி கலைஞர்களை வாத்தியங்களுடன் அழைத்து வருமாறு தெரிவித்து மண்டபத்திற்கு வருகைதந்து கலைஞர்களின் வருகைக்காக காத்திருந்தார்.
கலைஞர்களை அழைத்து வந்ததும் மூத்த கலைஞரொருவருக்கு தானே மாலை போட்டு அழைத்ததுடன் ஏனைய கலைஞர்களுக்கும் மாலை அணிவிக்குமாறு தெரிவித்தார்.
இதன்போது அரசியல்வாதிகள் எவருக்கும் மாலை போடாமல் கலைஞர்களை கெளரவப்படுத்தியமை வியப்பில் ஆழ்த்தியதுடன் மண்டபத்தையும் அங்கு வருகைதந்த சிறுமியையும் கலைஞர்களையும் திறந்து வைக்குமாறு தெரிவித்து தான் அருகில் இருந்து பார்வையிட்டார்.
இதனையடுத்து விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கலைஞர்களை அமருமாறு தெரிவித்து தன்னோட நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச்சென்று கலைஞர்களுக்கு பின்னாக 3 ஆவது வரிசையில் அமர்ந்திருந்து நிகழ்வுகளை கண்டுகளித்தார்.
செய்தியாளர் – கிஷோரன்