இன்றைய தினம் உலக வாழ் இந்துக்களால் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதற்கமைய இன்றைய தினம் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தலங்கள் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெறுகின்றன.
மனித உயிர்களுக்குள்ளும், இவ்வுலகத்திலும் உள்ள இருள் மற்றும் அஞ்ஞானம் நீங்கி, ஞான ஒளியைச் சரணடையும் நோக்கில், மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒற்றுமை மற்றும் முக்திப் பேறு போன்றனவும் இந்த நன்னாளில் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கையாகும் என சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிப்பதே, மனித குலத்தைத் தாண்டிய தெய்வீகப் பிரார்த்தனையாக உள்ளது.
சிவபெருமானை நினைத்து விரதமிருந்து, சிவராத்திரி தினத்தன்று பெற்றுக்கொள்ளப்படும் ஆன்மீக பலம், ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொண்டுவரும் சவால்களை வெல்வதற்குக் கிடைக்கும் ஆசீர்வாதமாகவே நாம் பார்க்கிறோம்.
சிவனுக்கு உகந்த நன்னாள் எடுத்துரைக்கும் நம்பிக்கை, உலக வாழ் மக்கள் அனைவரும் புத்தெழுச்சி பெறுவதற்கான உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, உண்மைத்தன்மை, தியாக மனப்பான்மை மற்றும் மன்னிப்பு வழங்கல் போன்ற உண்மைக் குணங்களுடன் வாழ்வதற்கான வழியமைக்கப்படுகிறது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எல்லா மதங்களினதும் வளமான வாழ்க்கைக்கு ஆன்மீகமே அடிப்படையானது என சிவராத்திரி விரத தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் அனைவராலும் புனிதமாக அனுட்டிக்கப்படும் விரத தினங்களிலே, மகா சிவராத்திரி மகோன்னதமானது.
இந்த நன்னாள் இந்துமக்கள் அனைவராலும் ஆன்மீக உணர்வோடு சிறப்புற அனுட்டிக்கப்படும் சுபீட்சத்துக்கான பெருநாளாகும்.
இந்த புனித வழிபாட்டின் ஊடாக கடவுளின் ஆன்மீக சக்தி தமக்கு கிடைக்கும் என்று இந்து மக்கள் நம்புகின்றனர்.
செழிப்பானதொரு வாழ்க்கைப் பயணத்திற்கு ஆன்மீக உணர்வு அடிப்படையான ஒன்று.
இன்றைய தினத்தில் அனைவரும் ஒருமித்த ஆன்மீக உணர்வோடு வழிபாடு செய்வதன் ஊடாக பல நன்மைகள் கைகூடும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும்.
பல்வேறு இனத்தவர்களும் மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலம், தங்களுக்கும் நாட்டிற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிட்டும்.
இலங்கைத் தாயின் மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் சுபீட்சம் மிக்கதும் அபிலாஷைகள் எல்லாம் கைகூடும் ஒரு எதிர்காலம் அமைய இந்த சிவராத்திரி தினம் மிகவும் முக்கியமானது என்பது தமது நம்பிக்கையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.