இலங்கைசெய்திகள்

பீரிஸ் குழு 25இல் ஜெனிவா விஜயம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழு எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனிவா பயணமாகின்றது.

மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை 3 ஆம் திகதி வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கான பதிலளிப்பை அன்றைய தினமே முன்வைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர்ரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடரின் உண்மை நிலையையும் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதகமான நிலைமை குறித்தும் அரசுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய அவற்றை எதிர்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட இலங்கை இராஜதந்திர குழுவுக்கு ஜனாதிபதி ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

மறுபுறம் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் இம்முறை சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் வரைபும் அரசுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கமாக இரு முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்புக்கூறல் மீதான அரசின் பாராமுகம் மற்றும் அண்மைய மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களும் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனவே, ஜெனிவாவில் இம்முறை ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்ள அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றது. கடந்த அமர்வுகளைபி போல் அல்லாது எதிர்ப்பு நிலையிலிருந்து பின்வாங்கவும், ஒத்திசைவாக செயற்பட்டு நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவும் விருப்பத்தை வெளிப்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக முக்கிய தகவல் மூலங்கள் குறிப்பிடுகின்றன.

அதிலும் இரு முக்கிய விடயங்கள் குறித்து அரசு ஏற்கனவே அவதானம் செலுத்தியிருந்தது. அதாவது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்பை முழு அளவில் பெற்று அதனூடாகத் தீர்மானத்துக்கு எதிராக வாக்கெடுப்பைக் கோரி தோல்வியடையச் செய்தல் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்று நெருக்கடிகளுக்குத் தீர்வு காணுதல் என்பவையாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button