இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று தன்னால் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் சென்றுள்ளது. நாடு மீண்டு எழ முடியாத நிலையில் உள்ளது.
ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவையாகும். எனவே, நாட்டையும், மக்களையும், ஜனநாயகத்தையும் நேசிக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஓரணியில் உடன் திரள வேண்டும். அப்போதுதான் நாட்டை மீட்டெடுக்க முடியும்.
இல்லையேல் உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும். அவ்வளவு படுமோசமான நிலைமையில் நாடு உள்ளது” – என்றார்.