இந்தியாசெய்திகள்

பாறை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு!!

india

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பாலக்காடு பகுதியில் உள்ள மலையில், பாறையொன்றில்  சிக்கியிருந்த 23 வயதான மலையேற்ற வீரர் ஒருவரை சுமார் 43 மணித்தியாலங்களின் பின்னர் இந்திய இராணுவத்தினர் இன்று மீட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தின் பாலக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த பாபு (23) என்ற இளைஞர் தனது 3 நண்பர்களுடன் நேற்று முன்தினம் (7) காலை வேளையில் மலம்புழாவில் பிரதேசத்திலுள்ள குரும்பாச்சி  மலையில் ஏறுவதற்காக சென்றுள்ளனர்.

திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மலையிலிருந்து இறங்கும்போது கால் தவறி, பாபு பாறை இடுக்கொன்றில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து, அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சித்தபோதிலும் பலனலிக்கவில்லை.

பின்னர், அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் அவ்விடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.

எனினும், இளைஞர் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியாததால் இராணுவத்தினரிடம் உதவி கோரப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சம்பவ இடத்துக்கு உலங்கு வானூர்தியில் விரைந்த இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, இளைஞரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு இன்று (9) காலை உயிருடன் மீட்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டதையடுத்து இராணுவ அதிகாரிகள் அவரை தோளில் சுமந்தவாறு மலை உச்சிக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து விமானம் மூலம்  அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button