எமது கோரிக்கைகளை தீர்த்து வைப்பதாக அலரிமாளிகையில் வைத்து மைத்திரி அரசு எமக்கு உறுதியளித்தது5 வருடங்கள் கடந்துள்ளதாக
வவுனியாவில் கடந்த 1818வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை அரசின் துரோகத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இன்று, இன்று அலரிமாளிகையில் இலங்கை அரசாங்கத்துடனான சந்திப்பு இடம்பெற்று 5வது ஆண்டு முற்றுப்பெறுகின்றது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வவுனியாவில் நாம் நடத்தினோம். அதனை கைவிடுமாறு எங்களை அணுகிய மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், எங்களின் கோரிக்கையை தீர்க்க எங்களை அலரிமாளிகைக்கு அழைத்தது.
அரசாங்கத்திடம் எங்களின் கோரிக்கைகளான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாதச் சட்டத்தை ரத்து செய்தல், காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதற்கு இணங்குவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
அவர்கள் அனைவரும் தங்களின் தீர்மானத்தினை எடுத்துவிட்டு விரைவில் எங்களை தொடர்பு கொள்வதாக உறுதியளித்தனர். ஆனால் 5 வருடங்கள் கடந்தும் எங்களை அழைக்கவோ பார்க்கவோ இல்லை.
சாகும் வரையிலான உண்ணாவிரதம் என்ற எங்களது போராட்டத்தை சிதைப்பதற்காகவே அவர்கள் அன்று எம்மை அலரிமாளிகைக்கு அழைத்து ஏமாற்றினர் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்தனர்.
செய்தியாளர் – கிஷோரன்