போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (05) காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
அதிகாரியின் தலைப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கழுத்துப் பகுதிக்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியை கோடரியால் தாக்கிய பின்னர் விஷம் அருந்தியுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரும் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேக நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி அம்பலாந்தோட்டை பொலிஸாரினால் குடிபோதையில் வாகனம் செலுத்தியமைக்கான குறித்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கோபமுற்ற சந்தேகநபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், அபராதம் விதித்த அதிகாரிளை விடுத்து வேறொரு பொலிஸ் உத்தியோகத்தரையே சந்தேகநபர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.