இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் 74 ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. சுதந்திர தின கொண்டாடத்தின் மரியாதை அணிவகுப்பில் முப்படையின் சுமார் 6,500 அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
கொவிட்-19 பரவல் காரணமாக சுகாதார வழிமுறைகளுக்கு அமைய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 480 இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள 8,034 பேரும் தரம் உயர்த்தப்படவுள்ளனர்.
அதேநேரம், 74 ஆவது சுதந்திரதின நிகழ்வினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபானசாலைகளையும் இன்றைய தினம் மூடி வைக்குமாறு மதுவரி திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவால்களுக்கு மத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தமது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒருவரையொருவர் மதித்து, மற்றவரின் இருப்புக்கு இடையூறாக இல்லாத சமூக மாற்றத்தின் மூலம் சுதந்திரத்தின் அர்த்தத்தை விரிவுபடுத்த முடியும் என்பது தமது நம்பிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.