குருநாகலில் புதிய மூன்று மாடி பிரதேச சபைக் கட்டடத்தின் திறப்பு விழா இன்று (02.02.2022) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
மாகாண சபைகள் அமைச்சின் புரநெகும திட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிதியை பயன்படுத்தி இந்த புதிய மூன்று மாடி பிரதேச சபை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக 215 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. புதிய கட்டடத்திற்கான அடிக்கல் 2019 இன் பிற்பகுதியில் நாட்டப்பட்டது .இரண்டு ஆண்டுகளில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய மூன்று மாடிக் கட்டடத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.
புதிய பிரதேச சபைக் கட்டிடத்தின் கீழ் மாடியில் சரப், பொது சுகாதார அலுவலகம், களஞ்சியசாலை காப்பகம், உணவகம் மற்றும் உடற்பயிற்சி நிலையம் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முதல் மாடியில் தொழில்நுட்பப் பிரிவு, நிறுவன பிரிவு, சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு, வருவாய் மேம்பாட்டுப் பிரிவு, அச்சகப் பிரிவு, தலைவர் அலுவலகம் போன்றவையும், இரண்டாம் மாடியில் கேட்போர்கூடம் மற்றும் கூட்ட மண்டபம் என்பன கட்டப்பட்டுள்ளன.
பிரதேச சபைக்குட்பட்ட கிராமப்புற வீதிகள் அபிவிருத்தி, தெருவிளக்கு பராமரிப்பு, மதிப்பீட்டு வரி அறவீடு, பிரதேசத்தில் குப்பைகளை அகற்றல் , கட்டிடங்கள் அமைப்பதற்கான திட்டங்களுக்கு அங்கீகாரம், பிரதேசத்தில் உள்ள வறிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவி, குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு. நூலக வசதிகளை வழங்குதல், சுற்றாடல் அனுமதிப்பத்திரம் வழங்குதல், வர்த்தக நிறுவனங்களைப் பதிவு செய்தல், தகனம் செய்வதற்கான வசதி அளித்தல், முச்சக்கரவண்டிச் சங்கங்களைப் பதிவு செய்தல், கிராமிய பாடசாலை அபிவிருத்தி போன்றவை பிரதேச சபைகளினால் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிகழ்வில் பொதுநிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனும் கலந்து கொண்டார்.
செய்தியாளர் – கிஷோரன்