“பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனிதநேயத்திற்கு செய்யும் மரியாதை” எனும் தொனிப்பொருளில் கௌரவிப்பு நிகழ்வு கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தலைமையில் இடம்பெற்றது.
நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவான இன்றைய நாளையொட்டி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பணிப்பிற்கமைய பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனிதநேயத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாடளாவிய ரீதியில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தினை சிறந்த முறையில் முன்னெடுத்தமை மற்றும் மக்களை வழிப்பூட்டியமைக்காக கிளிநொச்சி ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சான்றிதழினை சிரேஸ்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் ஊடகவியலாளர்கள் சார்பில் பெற்றுக்கொண்டார்.
குறித்த நிகழ்வில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தவதற்கு உழைத்த வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார துறையினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், வைத்தியர்கள், தாதியர்கள், மன்னார் சமூக மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள், இலங்கை செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.