இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்புகுறித்து தமிழக அரசு நேற்று(21) வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு இப்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 108 விசைப் படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், 17 நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் ரூபாவும் என மொத்தமாக 5 கோடியே 66 இலட்சம் ரூபா வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கைச் சிறையில் தடுத்த வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மீனவ சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, தமிழக மீன்வளத் துறை அமைச்சரும், மீனவ சங்கப் பிரதிநிதிகளும் நேரில் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுத்தர, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழியை முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.