“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன். அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல், தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.”
- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்மாத இறுதியில் அரசியல் போராட்டத்தை அறிவித்துள்ளார். உண்மையில் அவரது கட்சி நிலைப்பாட்டின்படி இது மிக சரியான முடிவாகும்.
’13 மற்றும் மாகாண சபைகள் வேண்டாம்’ என்றால் மாற்றுப் பயணம் இருக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் 13ஐ நிராகரித்தார்கள். ஆனால், நிராகரித்து விட்டு, “எல்லாம் தானாக மாறும்” என அவர்கள் வாளாவிருக்க இல்லை. புலிகளது வழிமுறையை ஏற்காதவர்கள்கூட, மாற்றுப் பயணத் திட்டத்தை முன்னெடுத்த அவர்களது அரசியல் நேர்மையை மதித்தார்கள்.
2005 முதல் 2009 வரை இறுதிப் போர் காலத்தில் கொழும்பில் வந்து அடைக்கலம் புகுந்த வடக்கு – கிழக்கு புலத்து உடன்பிறப்புகளுக்காக நானும், எனது கட்சியும், நான் உருவாகிய ‘மக்கள் கண்காணிப்பு குழு’ என்ற மனித உரிமை இயக்கமும் வீதி போராட்டங்களை உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்திப் போராடினோம்.
மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்து, அங்கிருந்தபடி நான் அறிக்கை அரசியல் செய்யவில்லை.
இது இங்கே சிங்கத்தின் குகையில் இருந்தபடி நான் நடத்திய என் நேர்மையான அறப் போராட்ட வரலாறு.
ஆகவே, ’13 என்பது முதல்படி கூட கிடையாது. அதை தீண்டவும் மாட்டோம். அதற்கு அப்பால் போயே தீருவோம்’ என்பவர்கள் மாற்று போராட்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டும். 13 இற்கு அப்பால் செல்லும் அந்த மாற்றுப் பயணம் ஊடக சந்திப்புகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்.
ஊடகங்களைச் சந்தித்து, ‘அமெரிக்காவில் இருந்து இந்திரன் கொண்டு வருகின்றான். ஆபிரிக்காவில் இருந்து சந்திரன் கொண்டு வருகிறான்’ என்று அறிக்கை இடுவதெல்லாம் போராட்டம் அல்ல.
ஆகவே, நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன். அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல், தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்” – என்றார்.